இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு - ஈக்வடார் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஈக்வடார் நாட்டின் மிகப்பெரிய நீர்மின் நிலையத் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் வழக்கின் கீழ், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான லெனின் மொரேனோவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
73 வயதான மொரேனோவுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் அரசுப் பதவிகளை வகிப்பதற்கும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகள் சிறைத்தண்டனை
'Coca Codo Sinclair' நீர்மின் நிலையக் கட்டுமானத் திட்டத்திற்காகச் சீன அரச நிறுவனமான Sinohydro இடமிருந்து சுமார் 76.1 மில்லியன் டொலர் இலஞ்சமாகப் பெறப்பட்டு, போலியான நிறுவனங்கள் மூலம் கைமாற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட மொரேனோவின் மனைவி, மகள், இரு சகோதரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகளுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அப்போதைய ஈக்வடாருக்கான சீனத் தூதுவருக்கும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மொரேனோ, இத்திட்டத்தின் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்களே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் 2017 முதல் 2021 வரை ஈக்வடார் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.