றீச்சா ஊடாக தாயகத்தில் முதலீடு..! பலருக்கு தொழில்வாய்ப்பு வழங்கிய கந்தையா பாஸ்கரன்
புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் தமிழர் தாயகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அவசியம் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
யுத்தத்தாலும், இனவழிப்பு செயற்பாடுகளாலும் எமது தாயக மண்ணில் இருந்து பல இலட்சக் கணக்கான தமிழர்கள் புலம் பெயர்த்து வெளிநாடுகளில் வாழுகின்றனர்.
புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள்
யுத்தத்தில் பின்னர், எமது தாயகம் பொருளாதார,சமூக, கலாசார,அரசியல் ரீதியாக சீர்குலைந்துள்ளது அல்லது சீர்குலைக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டி எழுப்புவதற்கு புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளின் பாரியளவான முதலீடுகள் அவசிய தேவையாகவுள்ளது.

இந்த முதலீட்டுக்குத் தடையாக அரசியல் தீர்வு இன்மை, பேரின அடிப்படை வாதம்,குறுகிய அரசியல்,வணிகப் போட்டி,தனிப்பட்ட காழ்ப்புணர்வு போன்றவை காணப்படுகின்றன.
அப்படி இருந்தும் சில தமிழ் உறவுகள் அந்த சவால்களையெல்லாம் முகங்கொடுத்து தமிழர் தாயகத்தில் முதலீடுகளைச் செய்து எமது மக்களுக்கு தொழில்வாய்ப்புகள்,வாழ்வாதாரம் என்பவற்றை வழங்கி முன்மாதிரியாகச் செயற்படுகின்றனர்.
கிளிநொச்சியில் றீச்சா
எடுத்துக்காட்டாக, தனது கடின உழைப்பினால், பொருளாதார மேம்பாடு அடைந்த கந்தையா பாஸ்கரன் , நெதர்லாந்தில்(ஹொலன்ட்) இருந்து தாயகம் வந்து கிளிநொச்சியில் றீச்சா என்ற அமைப்பின் பெயரில் முதலீடு செய்து சுமார் 500 தமிழ் உறவுகளுக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்திற்கு வழிசமைத்துள்ளார்.
இதனைப் பார்த்து இன்னும் பல தமிழ் முதலீட்டார்கள் தாயக மண்ணில் முதலீடுகள் செய்வதற்கு தம்மைத் தயார்படுத்தி வருகின்றனர். இதற்குத் தாயக மண்ணில் பலத்த ஆதரவுகள் உள்ளன.

ஆனால் சில சுயநலமிக்கவர்கள், முரண்நிலைவாதிகள், காழ்ப்புணர்வாளர்கள் குறுகிய சிந்தனையோடு நல்லவல்ல முலீடுகளை குழப்ப நினைக்கின்றனர்.
முதலீட்டாளர்கள் சிறுதவறுகள் செய்தால், அவற்றை முறையாக அணுகி, ஆலோசனைகள் கூறி திருத்த வேண்டியது சமூகப் பொறுப்பாகும்.
தமிழ்த்தேசிய உணர்வு மிக்க தமிழர்கள்
அதனை விடுத்து முதலீட்டார்களை திட்டமிட்டு வருத்துவது, அவர்களது முதலீடுகளை முடக்கி சீர்குலைக்க நினைப்பது, சமூகத்துக்கு இழைக்கின்ற கெடுதியாகும்.
இதனை தமிழ்த்தேசிய உணர்வு மிக்க தமிழர்கள் ஒரு போதும் செய்யமாட்டார்கள். ஆனால்,தன்னல வாதிகள், காழ்ப்புணர்வாளர்கள்,எதிர்மறை முகவர்கள் முதலீடுகளின் முக்கியத்துவத்தையோ,அதனால் சமூகம் பெறும் தொழில்வாய்ப்பு களையோ, சுற்றுலா மூலம் கிடைக்கும் டொலர் வருமானத்தையோ சிந்திக்க மாட்டார்கள்.

இப்படியானவர்கள் பற்றி முற்போக்கான தமிழ் உணர் வாளர்கள் விழிப்பாக இருந்து தடைகளை உடைத்து, தமிழ் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி எமது தாயக மண்ணை வலுவூட்டி வளப்படுத்த வேண்டும்.
எதிர்மறைப் போக்குகளை நேரிடை செயற்பாடுகளால் முறியடித்து முதலீடுகளை வரவேற்போம்.நல்லவை செய்வோம், அல்லவை களைவோம்.தமிழர் தாயக மண்ணை வளப்படுத்துவோம், அதற்கு உதவியாக இருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.