பிரித்தானியாவில் நான்காவது ஆண்டாக KPL 2026 - 18 அணிகள் பங்கேற்கும் மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி
பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களால் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவரும் கரப்பந்தாட்ட விளையாட்டிற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி வரும் Kent Premier League (KPL) போட்டித் தொடரின் நான்காவது ஆண்டுக்கான மாபெரும் போட்டி எதிர்வரும் 27 செப்டம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை, பிரித்தானியாவில் தென்பகுதியிலுள்ள Kent மாநிலத்தின் Maidstone Leisure Centre உள்ளக விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வெற்றிகரமாக நடைபெற்ற KPL போட்டித் தொடரானது, இம்முறை மேலும் விரிவுபடுத்தப்பட்டு Open பிரிவு மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டோர் (Over 50) பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடைபெறவுள்ளது.
இம்முறை மொத்தமாக 18 சிறப்பு அணிகள் களமிறங்கவுள்ளன.
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் கரப்பந்தாட்டக் கழகங்களைச் சேர்ந்த அனுபவமிக்க வீரர்கள், திறமையான இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் என பலரும் ஏல முறையின் மூலம் இந்த அணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஏலத்தின் மூலம் உருவான KPL அணிகள்
KPL போட்டித் தொடரின் முக்கியமான தனித்துவங்களில் ஒன்றாக வீரர்கள் ஏல முறையில் அணிகளுக்குத் தெரிவு செய்யப்படுவது அமைந்துள்ளது.
வழமையான கழகப் போட்டிகளில் ஒரே அணிக்காக விளையாடும் வீரர்கள், KPL போட்டியில் வெவ்வேறு அணிகளின் கீழ் ஒன்றிணைந்து களமிறங்குகின்றனர். KPL விதிமுறைகளின் அடிப்படையில் அணிகளுக்கு வழங்கப்பட்ட புள்ளிகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு அணியின் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் தெரிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் பல்வேறு கழகங்களைச் சேர்ந்த வீரர்கள் ஒரே அணிக்குள் இணைந்து விளையாடுவதுடன், புதிய விளையாட்டு அனுபவம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் கழகங்களுக்கிடையிலான நட்புறவு ஆகியவற்றை வளர்ப்பதற்கான தளமாகவும் KPL அமைந்துள்ளது.
18 சிறப்பு அணிகள் களத்தில்
KPL 2026 போட்டியில் Open பிரிவில் 12 அணிகளும், Over 50 பிரிவில் 6 அணிகளும் பங்கேற்கின்றன.
Open பிரிவு
1. AGNI SC
2. UK Storms
3. Wales Warriors
4. Sujatha
5. Maidstone SuperKings
6. ராதா சிறப்பு அணி
7. Karikaalan UK 8. Dartford Kings
9. தீச்சுவாலை
10. Maidstone Thunder
11. Royals
12. London Lions 50 வயதுக்கு மேற்பட்டோர் – Over 50
1. கழுகுகள்
2. Rising Stars
3. Sujatha
4. King Cobra
5. கப்டன் மேனன்
6. ராதா சிறப்பு அணி இவ்வாறு இரண்டு பிரிவுகளிலும் மொத்தம் 18 அணிகள் களமிறங்குவதால், ஒரே நாளில் பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பான கரப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
காலை முதலே களைகட்டும் KPL 2026
KPL 2026 போட்டி நாளன்று காலை 8மணி தொடக்கமே Maidstone Leisure Centre கரப்பந்தாட்ட ரசிகர்களால் களைகட்டவுள்ளது. காலை 8.30 மணியளவில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகும்.
Open பிரிவு மற்றும் Over 50 பிரிவு அணிகள் தங்களுக்கிடையில் லீக் சுற்றுப் போட்டிகளில் மோதவுள்ளதுடன், போட்டியின் அடுத்த கட்டங்களில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இரு பிரிவுகளிலும் ஒவ்வொரு போட்டியும் அணிகளின் திறமை, அனுபவம் மற்றும் அணிச் சேர்க்கையை வெளிப்படுத்தும் வகையில் அமையவுள்ளதால், KPL 2026 போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பான விளையாட்டு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிக்கிண்ணங்களுடன் அதியுச்ச பணப்பரிசுகள்
KPL 2026 இன் மற்றுமொரு முக்கிய சிறப்பம்சமாக பணப்பரிசுகள் அமைந்துள்ளன. வெற்றிபெறும் அணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்களுடன் 3000 பவுண்ஸ் பணப்பரிசுகள் வழங்கப்படுவதுடன், போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களை கௌரவிக்கும் வகையில் பல்வேறு தனிநபர் விருதுகளும் பணப்பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
இதன் மூலம் அணிகளின் வெற்றிக்கான போட்டியுடன், தனிநபர் வீரர்களின் திறமைகளும் வெளிப்படுத்தப்படும் வகையில் KPL 2026 போட்டித் தொடர் அமையவுள்ளது.
தொலைக்காட்சி நேரலை – உலகம் முழுவதும் பார்வையிடும் வாய்ப்பு
KPL போட்டித் தொடரின் மற்றுமொரு முக்கிய அம்சமாக அதன் நேரலை ஒளிபரப்பு அமைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் KPL போட்டிகள் மற்றும் ஏல நிகழ்வுகள் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டு, பிரித்தானியா மட்டுமன்றி ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
அதேபோன்று இம்முறையும் KPL 2026 போட்டிக்கான தொலைக்காட்சி நேரலை மற்றும் இணையவழி ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டி தினத்தன்று மெய்வெளி தொலைக்காட்சியில் நேரலையில் போட்டிகளை கரப்பந்தாட்ட ஆர்வலர்கள் கண்டுகளிக்க முடியும்.
இதன் மூலம் போட்டி நடைபெறும் நாளில் Maidstone Leisure Centre-க்கு நேரடியாக வர முடியாத ரசிகர்களும் உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் KPL 2026 போட்டிகளை நேரடியாகக் கண்டு ரசிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் கரப்பந்தாட்டத்திற்கு புதிய தளமாக KPL
பிரித்தானியாவில் பல ஆண்டுகளாக பல்வேறு கழகங்களின் பங்கேற்புடன் நடைபெறும் தமிழர் கரப்பந்தாட்டத்திற்கு KPL போட்டித் தொடர் புதிய போட்டி அனுபவத்தையும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது.
கழக ரீதியாக விளையாடி வரும் வீரர்களை ஒரே போட்டித் தொடரில் ஒன்றிணைத்து, ஏல முறையின் மூலம் அணிகளை உருவாக்கி, வெவ்வேறு கழகங்களைச் சேர்ந்த வீரர்கள் ஒரே அணிக்காக களமிறங்கும் வாய்ப்பை KPL ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, புதிய கழகங்கள் மற்றும் இளநிலை வீரர்களுக்கும் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான விளையாட்டு மேடையாக KPL தொடர்ச்சியாக உருவெடுத்து வருகிறது. நான்காவது ஆண்டில் KPL 2026
மூன்று ஆண்டுகளாக ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட KPL போட்டித் தொடர், இம்முறை நான்காவது ஆண்டில் 18 அணிகளுடன், இரண்டு பிரிவுகளில், உள்ளக விளையாட்டு அரங்கில் மேலும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
“KPL 2026 – கரப்பந்தாட்டத்தின் புதிய அத்தியாயம்” என்ற எதிர்பார்ப்புடன் நடைபெறவுள்ள இப்போட்டியில், பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.
வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றும் அணிகள் எது?, தனிநபர் விருதுகளை வெல்லும் வீரர்கள் யார்? என்பதற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
KPL 2026 – போட்டி நாள்
திகதி: 27 செப்டம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை
இடம்: Maidstone Leisure Centre
ஆரம்ப நிகழ்வுகள்: காலை 8.30 மணி
பிரிவுகள்: Open – 5 A-Side | Over 50
மொத்த அணிகள்: 18
பணப்பரிசுகள்: £3000 வழங்கப்படவுள்ளன
தொலைக்காட்சி நேரலை: ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இணையவழி நேரலை: உலகளாவிய பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது https://www.meiveli.tv/kpl2026/?amp=1 இந்த இணைப்பினூடாக இந்த நிகழ்வை நேரலையில் உலகின் எந்த பாகத்தில் இருந்தும் கண்டுகளிக்கலாம்.
பிரித்தானியாவில் உள்ள கரப்பந்தாட்ட வீரர்கள், ரசிகர்கள், குடும்பங்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரும் 27 செப்டம்பர் அன்று Maidstone Leisure Centre-க்கு நேரில் வருகை தந்து KPL 2026 போட்டியை கண்டுகளித்து ஆதரவு வழங்குமாறு KPL ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
KPL 2026 – கரப்பந்தாட்டத்தின் புதிய அத்தியாயம்! வெற்றிக்கிண்ணம் யாருக்கு? நேரில் வாருங்கள். போட்டியை இரசித்து ஆதரவு தாருங்கள்.
KPL 2026 போட்டியானது கிரி - சுரேஸ் - கிருஷ்ணா - சுபாஸ் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெறுகின்றது.




















