சிறைக்குள் ஹரக் கட்டா - கெஹெல்பத்தர பத்மேவுக்கு இடையில் மோதல் - பின்னணி குறித்து வெளியான தகவல்
பாதாளக் குழுத் தலைவர்களான ஹரக் கட்டா மற்றும் கெஹெல்பத்தர பத்மேவுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டமை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் தீவிர விசாரணைகள் ஆரம்பித்துள்ளது.
வெலிசர கடற்படை முகாமில் அமைந்துள்ள உயர் பாதுகாப்புச் சிறை அறையில் ஏற்பட்டதாக கூறப்படும் மோதல் தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் காயங்களுக்கு உள்ளான கெஹெல்பத்தர பத்மே, கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் சிறை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறைக்குள் மோதல்
இரவு உணவு வழங்குவதற்காக வெலிசர கடற்படை முகாமில் உள்ள சிறை அறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் வெளியே அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

ஹரக் கட்டா தன்னிடம் இருந்த ஊன்றுகோலால் கெஹெல்பத்தர பத்மே மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வெலிசர கடற்படை முகாமில் அமைந்துள்ள சிறை அறைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹரக் கட்டா மடகாஸ்கரில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், கெஹெல்பத்தர பத்மே இந்தோனேசியாவில் தலைமறைவாகியிருந்த போது கைது செய்யப்பட்டார்.
ஹரக் கட்டா கைது செய்யப்பட்ட பின்னர், கெஹெல்பத்தர பத்மே அவரது மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பணப்பரிவர்த்தனைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
கொலைத் திட்டம்
கெஹெல்பத்தர பத்மே 2 சந்தர்ப்பங்களில் ஹரக் கட்டாவை சுட்டுக் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹரக் கட்டா நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, கமராவுடன் ஊடகவியலாளர் வேடத்தில் ஒருவரை அனுப்பி அவரை கொலை செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சந்தர்ப்பத்தில் சயனைட் ஊசி செலுத்தி ஹரக் கட்டாவை கொலை செய்ய பத்மே திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கொலைத் திட்டங்களின் காரணமாக ஹரக் கட்டா, கெஹெல்பத்தர பத்மே மீது கடும் விரோதத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.