இரண்டாம் காலாண்டின் பின் பொருளாதார நெருக்கடியில் ஏற்படவுள்ள மாற்றம்: செஹான் சேமசிங்கவின் தகவல்
பெறுமதிசேர் வரி அதிகரிப்பால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டின் பின் படிப்படியாக குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி வேகம்
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01.01.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 2023 மூன்றாம் காலாண்டிலிருந்து பொருளாதார வளர்ச்சி வேகமானது நேர்மறையாகியுள்ளது.
அதற்கமைய 2022இல் மறை பெறுமானத்துக்கு வீழ்ச்சியடைந்த பொருளாதார வளர்ச்சி வேகம் 2023இல் சராசரியாக 3 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அந்நிய செலாவணி இருப்பு
அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தினால் இரண்டாம் கட்ட கடன் தொகை அங்கீகரிக்கப்பட்டதன் பின் நாணய நிதியத்திடமிருந்து கிடைக்க பெற்ற 337 மில்லியன் டொலர், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கிடைக்கப் பெற்ற 220 மில்லியன் டொலர் மற்றும் உலக வங்கியிடமிருந்து கிடைக்கப் பெற்ற 250 மில்லியன் டொலர் என்பவற்றுடன் தற்போது 4 பில்லியன் டொலருக்கும் அதிக அந்நிய செலாவணி இருப்பைப் பேண முடியும் என்ற இலக்கை அண்மித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |