நாடு மீண்டும் வீழ்ந்தால் மீளவே முடியாது! முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ எச்சரிக்கை
கடந்த முறையைப் போல இந்த முறையும் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தால், அதிலிருந்து மீண்டெழுவது எளிதான காரியமல்ல என முன்னாள் நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 54ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(22.5.2026) நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த முறை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது நமக்கு உதவி செய்வதற்குப் பல நாடுகள் முன்வந்தன. ஆனால், இம்முறை நாடு மீண்டும் வீழ்ந்தால் எழும் நம்பிக்கையை வைக்க முடியாது.
பொருளாதார வீழ்ச்சி
எனவே, நாட்டின் மீது பற்றுள்ள அனைவருக்கும் வீழ்ச்சியடையப் போகும் இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில் காணப்பட்டதைப் போன்று இலங்கையிலும் இரண்டு பலமான பிரதான அரசியல் கட்சிகள் இருந்தன.

ஆனால் நம் நாட்டில் அவ்வப்போது ஆட்சிப் பொறுப்பிலிருந்த தலைவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் சுயலாபங்களுக்காக உடைத்து பலவீனப்படுத்தினார்கள். அதன் கசப்பான விளைவை இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவித்து வருகின்றது.
இவ்வாறான பின்னணியில், தமக்கு முறையான நிர்வாக அறிவோ அல்லது அரசியல் தெளிவோ இன்றி அரச அதிகாரத்தைக் கைப்பற்றப் போவதாகக் கூறும் குழுக்களின் முயற்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை அழிக்கும் ஒரு சர்வாதிகாரப் போக்காகும்.
இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் பலவீனப்படுத்தப்பட்டதன் காரணமாக, நிர்வாக அறிவும் அரசியல் தெளிவும் அற்ற குழுக்களிடம் நாட்டின் அதிகாரம் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.