சிறைகளில் தொடரும் கொடூரம் - பழிவாங்கும் அதிகாரிகளுக்கு எதிராகச் சுதேஷ் நந்திமால் ஆவேசம்
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போதைய நிலைமை மிகவும் அபாயகரமாக மாறியுள்ளது என்றும், சிறைத்துறை அதிகாரிகள் கைதிகள் மீது மிகக் கொடூரமான வன்முறைகளை ஏவி வருகின்றனர் என்றும் சிறைக் கைதிகள் உரிமை பாதுகாப்புக் குழுவின் அழைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் சிறைத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்கும் நோக்கில் சிறைத்துறை அதிகாரிகள் கைதிகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு
நீர்கொழும்பு சிறையிலிருந்து ஏனைய சிறைகளுக்கு மாற்றப்படும் கைதிகள் அதிகாரிகளால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும், இதில் ஏற்கனவே பல கைதிகள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் பூசா சிறைச்சாலைகளிலும் இத்தகைய கொடூரங்கள் அரங்கேறுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெலிக்கடை சிறைச்சாலையில் அவிஷ்க கயான் என்ற இளைஞர் அதிகாரிகள் நடத்திய தாக்குதலால் உயிரிழந்துள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தச் சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளைச் சிறைக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
அவர் உயிருடன் இருந்தால், உடனடியாக ஊடகங்கள் அல்லது நீதிமன்றம் முன்னிலையில் அவரை முன்னிலைப்படுத்தி நிரூபிக்க வேண்டும்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரின் மௌனம் மற்றும் அலட்சியமான போக்குச் சந்தேகத்தை எழுப்புகின்றது.

இவ்வளவு பெரிய வன்முறைகளை அமைச்சர் தெரிந்தே மறைக்கின்றாரா அல்லது இதற்கு அனுமதி வழங்குகின்றாரா?
நேற்று புதன்கிழமை நீதி அமைச்சரைச் சந்தித்துப் பேசுவதற்குத் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, சிறைச்சாலைகள் துறை இயக்குநருடனேயே பேச்சு நடத்த அனுமதிக்கப்பட்டது.
இந்த வன்முறைகள் நாட்டுக்கும் அரசாசுக்கும் பெரும் கறையை ஏற்படுத்தும். அமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு வழங்காவிட்டால், பெருந்திரளான மக்களைத் திரட்டி அமைச்சகத்துக்கு முன்பாக மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.