எபோலா வைரஸ் பரவல் தீவிரம்: பல நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள்
கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக அரிய வகையான 'புந்திபுகியோ' என்ற எபோலா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து, உலக நாடுகள் பலவும் நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
கொங்கோவில் கடந்த மே 15 முதல் இந்த வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 220 பேர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
நாடுகளுக்கிடையிலான பயணத்தடை
உகாண்டாவிலும் 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, ஒருவர் உயிரிழந்துள்ளார். நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஆபிரிக்க நாடுகள் சில உள்ளூர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள கிழக்கு கொங்கோவின் புனியா நகருக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் கொங்கோ உடனான அனைத்து நேரடி விமான சேவைகளையும் உகாண்டா ரத்து செய்துள்ளதுடன், எல்லைப் பகுதியில் பேருந்து மற்றும் படகுப் போக்குவரத்துகளையும் 4 வாரங்களுக்கு முடக்கியுள்ளது.

சர்வதேச அளவில் பல நாடுகள் தங்களின் எல்லைகளில் கடுமையான பயணத் தடைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன. கடந்த 21 நாட்களில் கொங்கோ, உகாண்டா அல்லது தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்த அமெரிக்கர் அல்லாத வெளிநாட்டினர் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்துள்ளது.
கனடா மற்றும் பஹாமாஸ் ஆகிய நாடுகள் கொங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் குடிமக்கள் தங்கள் நாடுகளுக்குள் நுழைய தற்காலிகத் தடை விதித்துள்ளன.
மேலும், இந்த நாடுகளிலிருந்து வரும் கனடா குடிமக்கள் 21 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
'புந்திபுகியோ' எபோலா வைரஸ் பாதிப்பு
இதேபோல ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் இந்நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு 30 நாட்கள் தற்காலிகத் தடையை விதித்துள்ளன. பாதிப்பு இல்லாத நாடுகளும் தங்களின் விமான நிலையங்களில் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
குறிப்பாக இந்தியா, முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் கூடுதல் மருத்துவப் பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், தனது நாட்டு குடிமக்களை கொங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த வாரத்தில் புது டெல்லியில் நடைபெறவிருந்த 'இந்தியா - ஆபிரிக்கா உச்சி மாநாடு' மற்றும் சர்வதேச புலிகள் கூட்டமைப்பின் மாநாடு ஆகியவற்றை இந்தியா ஒத்திவைத்துள்ளது.
தாய்லாந்து மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் கொங்கோ, உகாண்டாவிலிருந்து வரும் பயணிகள் தங்களின் வருகையின் போது எபோலா நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்கியுள்ளதோடு, விமான நிலையங்களில் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன.
இந்த 'புந்திபுகியோ' எபோலா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் கடுமையான இரத்தப்போக்கு காய்ச்சல் ஏற்படும் என்றும், பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் திரவங்கள் மூலமாகவே இது பரவும் என்பதால், இத்தகைய பயணக் கட்டுப்பாடுகள் நோய் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.