கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: பாப்பரசர் லியோ விடுத்துள்ள கோரிக்கை
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக உயர்ந்துள்ள உருத்தூக்கும் நிலையில், சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட்டு உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாப்பரசர் லியோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய தகவல்களின்படி, இத்துரி மற்றும் வட கிவு மாகாணங்களில் புதிதாக 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை 2,642 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொங்கோவின் வரலாற்றில் மிக மோசமான எபோலா பரவலாக இது பதிவாகியுள்ளதுடன், பாதிப்புக்குள்ளானவர்களில் சுமார் 48 சதவீதம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தடுப்பு நடவடிக்கை
கடந்த மே மாதம் மத்தியில் ஆரம்பமான இந்த 17 ஆவது எபோலா பரவலை உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது.
தற்பொழுது பரவி வரும் 'புண்டிக்புகியோ' எனும் அரிதான எபோலா வைரஸ் வகைக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை.

இருப்பினும், கடந்த காலத்தில் பயன்பாட்டிலிருந்த 16,250 தடுப்பூசி டோஸ்கள் முதற்கட்டமாக கொங்கோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நிலவும் தீவிர நிலையைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களை உள்ளடக்கிய வகையில் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து அதிகளவிலான உயிர்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும் என வத்திக்கானில் உரையாற்றிய பாப்பரசர் லியோ வலியுறுத்தியுள்ளார்.