கொங்கோவில் எபோலா பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000 ஐக் கடந்துள்ளது.
அத்துடன், இந்தநோய் தற்போது நாட்டின் புதிய மாகாணமொன்றிற்கும் பரவியுள்ளதாக அரசாங்கத் தரவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புண்டிக்புக்யோ ரக எபோலா வைரஸினால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,398 ஆக உயர்ந்துள்ளது.
நோயாளி அடையாளம்
இதுவரை நாட்டின் ஏழு மாகாணங்களில் 7,022 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலின் மையப்பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ள தெற்கு உபங்கி மாகாணத்திலும் முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தெற்கு கிவு மாகாணத்திலிருந்து பயணித்து, கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த 23 வயதுடைய வாலிபர் ஒருவருக்கே எபோலா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
போதிய நிதி
பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை, போதிய நிதி வசதியின்மை மற்றும் செயல்பாட்டாளர்களின் குறைபாடு காரணமாக நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால்கள் நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொங்கோ வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மோசமான எபோலா பரவலாக இது பதிவாகியுள்ளதுடன், உலகளவில் மேற்கு ஆப்பிரிக்கப் பரவலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பாதிப்பாகவும் உருவெடுத்துள்ளது.