அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அயர்லாந்திற்கு விஜயம்
ஈரான் போர் பதற்றங்கள் மற்றும் வரவிருக்கும் அமெரிக்க இடைத்தேர்தல் பிரசாரங்களுக்கு மத்தியிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் விஜயமாக அயர்லாந்தை சென்றடைந்துள்ளார்.
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் தரையிறங்கிய ட்ரம்ப், அந்நாட்டின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, டூன்பெக்கில் உள்ள தனது சொந்த ஓய்வு விடுதியில் நடைபெறவுள்ள கோல்ஃப் தொடரிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
பேச்சுவார்த்தை
இந்த விஜயத்தின் போது, அயர்லாந்து பிரதமர் மீஹால் மார்ட்டின் மற்றும் அந்நாட்டின் ஜனாதிபதி கேத்ரின் கொன்னோலி ஆகியோரை ட்ரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
வர்த்தக உறவுகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் ஈரான் போர் குறித்த அயர்லாந்தின் கவலைகள் இச்சந்திப்பில் முக்கிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2019-ஆம் ஆண்டு ட்ரம்ப் அயர்லாந்து வந்திருந்தபோது, அதற்கு எதிராக அப்போதைய அரசியல்வாதியான கேத்ரின் கொன்னோலி போராட்டம் நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், ட்ரம்பின் இந்த விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டப்ளின் மற்றும் டூன்பெக் பகுதிகளில் அமைதி வழி போராட்டங்களுக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.