கொங்கோவில் தீவிரமடையும் எபோலா: 16,000க்கும் அதிகமான தடுப்பூசிகள் அனுப்பி வைப்பு
கொங்கோவில் மிக மோசமான எபோலா வைரஸ் பரவல் பதிவாகி வரும் நிலையில், அந்நாட்டிற்கு 16,250 'எர்வெபோ' தடுப்பூசிகள் முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் கூட்டாளி அமைப்புகள் இணைந்து அறிவித்த 70,000 தடுப்பூசி அளவுகளில் இந்த முதற்கட்டத் தொகுதி வெள்ளிக்கிழமை இரவு நாட்டின் தலைநகரான கின்சாசாவைச் சென்றடைந்துள்ளது.
எஞ்சிய தடுப்பூசிகள் வரும் வாரங்களில் நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படவுள்ளன.
தடுப்பூசிகள்
தற்போது பரவி வரும் 'புண்டிபுக்கியோ' வகை எபோலா வைரஸுக்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இதுவரை கண்டறியப்படவில்லை.

இருப்பினும், எர்வெபோ தடுப்பூசி ஓரளவிற்கு பாதுகாப்பை வழங்கக்கூடும் என விலங்கு சோதனைகளின் ஆரம்பகட்ட தரவுகள் காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த மே மாத நடுப்பகுதியில் இருந்து பரவி வரும் இந்த நோய்த்தொற்றினால் இதுவரை 5,300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நோய்ப்பரவல் "அதிவேகமாக" தீவிரமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.