சாராவை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் தொடர்பில் இராணுவத்தினர் அறிந்திருந்த இரகசியம்!
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரி சாராவை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் குறித்து இலங்கை இராணுவத்தினருக்கு தெரிந்திருக்கலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத் தரப்பிடம் கேள்வி எழுப்பும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சாராவை கடத்திச் சென்ற மர்ம நபர்கள்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரியான சாரா என்று அறியப்படும் புலஸ்தினியை ஒருவர் கடத்திச் சென்றதாக தாக்குதல்தாரி சஹ்ரானின் மனைவி ஆதியா தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சாரா உயிரிழந்ததாக இறுதியாக தெரிவிக்கப்பட்ட டீ.என்.ஏ. அறிக்கையை நாங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதேபோன்று அன்று எதிர்க்கட்சியில் இருந்த நீங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிரகாரம் தற்போது இந்த தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் விசாரணை ஆரம்பித்திருக்கிறது. அதற்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்கத் தயார்.
ஆனால் தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்தவர் தற்போது அரசாங்கத்தில் இருக்கும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகர.
அன்று சாய்ந்தமருதில் குண்டு வெடித்தபோது, அந்த இடத்துக்கு ஆரம்பமாக வந்தது இராணுவத்தினராகும். அப்படியானால் சாராவுக்கு என்ன நடந்தது? அவரை யார் கடத்திச்சென்றார்கள் என்பது தொடர்பான தகவல் இராணுவத்துக்கு தெரிந்திருக்க வேண்டும்.
அநுர ஜயசிங்கவுக்கு தெரியாமல் இராணுவத்தினர் அங்குவர முடியாது. அவரும் அந்த சந்தர்ப்பதில் தெரிந்திருக்காவிட்டாலும் பின்னராவது இதனை தெரிந்திருப்பார்.
அன்றைய அரசாங்கத்துக்கு இந்த தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாக ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார். அப்படியானால் அன்றைய அரசாங்கத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்த அநுர ஜயசிங்க, தற்போது அரசாங்கத்தின் பிரதி அமைச்சராக இருக்கும் நிலையில், அவருக்கு கீழ் உள்ளவர்களே தற்போது இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும்போது, அந்த விசாரணை எவ்வாறு நீதியான விசாரணை என தெரிவிக்க முடியும் என குறிப்பிட்டார்.



