பிள்ளையானுக்கு தொடரும் சிக்கல் : அடுத்தக்கட்ட தீவிர நகர்வுக்கு தயாராகும் அரசாங்கம்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் சிறையில் இருக்கும் போதே அறிந்திருந்தார் என்பது தெரியவந்துள்ள நிலையில், அதனடிப்படையில் பிள்ளையான் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னநர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிள்ளையானுக்கு எப்படி தெரியும்..
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முன்னரே அறிந்திருந்தமை தொடர்பில் பிள்ளையான் மீதான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் அரச புலனாய்வு சேவை(SIS) இயக்குநரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான(SDIG) நிலந்த ஜயவர்தனவை, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் போது கடமை தவறியமைக்காக பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னர் பெறப்பட்ட உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக நிலந்த ஜயவர்தன மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பில் பல கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் அடிப்படையில் குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையைக் கருத்திற் கொண்டு அவரை பணியில் இருந்து உடனடியாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில்தான் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்த விதம் தொடர்பாக பிள்ளையானுக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பான உண்மைகள் எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.




