யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா
ஒரு காலம் சேவல் கூவி எமது இரவுகள் விடிந்தன.பிறகு ஒரு காலம் ஏறி கணைகளின் வெடித்துப் பகல் விடிந்தது.ஆய்த மோதல்களுக்குப் பின் பேக்கரி வாகனங்களின் இசையோடு பகல் விடிகிறது.ஆனால் அண்மை ஆண்டுகளாக பேக்கரி வாகனங்களோடு சேர்த்து மற்றொரு வாகனமும் ஊர் ஊராக வருகிறது. அதுதான் தண்ணீர் விற்கும் வாகனம்.அதுவும் இசையோடுதான் வருகிறது.
அதாவது நீரை விலைக்கு வாங்கும் ஒரு சமூகமாக நாங்கள் எப்பொழுதோ மாறி விட்டோம்.சில ஆண்டுகளுக்கு முன்பு கலாநிதி ஆறு.திருமுருகன் இதுதொடர்பாக பகிரங்கமாக பேசியிருந்தார்.”ஆலயங்களில் காணப்படும் பொதுக் கிணறுகளில் உள்ள நீரை தீர்த்தம் என்று கூறி ஊர் முழுதும் அருந்தியது. ஆனால் இப்பொழுது பெரும்பாலானவர்கள் வடிக்கப்பட்ட நீரைக் குடிக்கிறார்கள்” என்ற பொருள்பட அவர் கவலைப்பட்டிருந்தார்.அது மட்டுமல்ல. “கிணற்று நீரை குடிக்கலாமா இல்லையா என்பதனை இதுதொடர்பாக துறைசார் நிபுணர்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் அவர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.ஆனால் அந்த வேண்டுகோளுக்கு எனக்கு தெரிந்தவரை இன்றுவரையிலும் யாரும் உத்தியோகபூர்வமாக பதில் சொல்லவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் சுன்னாகத்தில் நடந்த ஒரு சந்திப்பின்போது இது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜாவிடம் இந்த கேள்வியை நான் கேட்டேன்.அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். ஒஸ்ரேலியாவில் தான் மேற்படிப்பு படிக்கும் பொழுது இந்த கேள்வியை ஒருவர் தமது விரிவுரையாளரிடம் கேட்டாராம்.அதற்கு அந்த விரிவுரையாளர் சிரித்துக்கொண்டே சொன்னாராம்,”யாழ்ப்பாணத்தவர்கள் கெட்டிக்காரர்கள் என்று கூறுகிறோம்.அந்தக் கெட்டித்தனத்துக்கும் அவர்களுடைய கிணத்து நீருக்கும் தொடர்பு இருக்குமா என்று.
அரசியல் நடப்பு
ஆனால் நடப்பு நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்தால் அதாவது ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் நடப்புகளைத் தொகுத்துப் பார்த்தால் ஈழத் தமிழர்கள் தங்களைக் கெட்டிக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கமுடியுமா என்ற கேள்வி பாரதூரமாக மேல் எழுகிறது. சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் கொழும்புத் துறைப் பகுதியை சேர்ந்த ஒரு நாடகச் செயற்பாட்டாளரை ஒரு நீர் விற்கும் கடையில் கண்டேன்.அவரிடம் கேட்டேன் “உங்களுடைய கிணற்று நீரை அருந்த முடியாதா?” என்று. அவர் சொன்னார் “எனது பகுதிகளில் நீர் பெருமளவுக்கு உவராகிக் கொண்டு வருகிறது” என்று. அவர் அப்படி கூறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே யாழ் கடல் நீரேரியை அண்மித்திருக்கும் கோப்பாய் இருபாலை ஆகிய பகுதிகளில் நீர் உவராகி வருவதாக முறைப்பாடுகள் உண்டு.
ஆனால் இது இன்றைக்கு நேற்றைக்கு வந்த பிரச்சினை அல்ல. ஒரு நூற்றாண்டு கால பிரச்சனை.பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் 1894 ஆம் ஆண்டு பொது வேலைகள் திணைக்களத்தின்(PWD) ஆணையாளருடைய அறிக்கையில் பின்வருமாறு கூறப்படுகிறது…”யாழ்ப்பாணத்துக்கான நீர் வழங்கல் குறுகிய காலத்தில் ஒரு மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுக்கக்கூடும். யாழ்ப்பாணத்தில் உள்ள கிணறுகளில் பெரும்பாலானவை படிப்படியாக உவர்த்தன்மை கொண்டவையாக மாறிவருவது உண்மை. எடுத்துக்காட்டாக, பொது வேலைகள் பகுதியின் வளவுக்குள் இருக்கும் கிணறு 15 ஆண்டுகளுக்கு முன்னர் நல்ல தண்ணீரைக் கொண்டிருந்தது.
அந்த வளவிலிருந்து நீர் பாய்ச்சி மிகச் சிறப்பான திராட்சைக் கொடிகளை வளர்த்தனர்.ஆனால், இப்போது நீர் உவர்த்தன்மை கொண்டதாக மாறிவிட்டது.திராட்சைக் கொடிகளும் அழிந்துவிட்டன.கச்சேரி வளவுக்குள் உள்ள பெரும்பாலான கிணறுகளுக்கும் இதே நிலைதான்.தற்போது முற்றவெளியில் உள்ள இரண்டு கிணறுகளும், சுண்டிக்குழிக் குருமனை வளவில் உள்ள ஒரு கிணறும் மட்டுமே நல்ல தண்ணீர்க் கிணறுகள். முற்றவெளிக் கிணறுகளிலிருந்து தொடர்ச்சியாக நீரை அள்ளுவதால்,அவை நீண்டகாலம் தாக்குப் பிடிக்கும் என்பது ஐயத்துக்குரியது.இந்த நல்ல நீர்த் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏதாவது ஒரு வழியில் தயாராவதற்காகப் புத்தூர்க் கிணற்றுத்திட்டத்தைக் சுவனத்தில் எடுத்துள்ளோம்.
மேற்படி தகவல்களை அண்மையில் வெளியிடப்பட்ட “யாழ்ப்பாண நகரத்தின் வரலாறு” என்ற நூலில் காணலாம். தமிழ் விக்கிமீடியாவை ஸ்தாபித்தவர்களில் ஒருவராகிய,கட்டடப்படக் கலைஞர் மயூரநாதன் அந்த நூலை எழுதியுள்ளார்.ஆகவே இது ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே மேலெழுந்த ஒரு பிரச்சினை.அதுவும் குடித்தொகை பெருகாத,தொழில்நுட்பம் இப்போதிருக்கும் வளர்ச்சியை அடைந்திராத,ஒரு காலகட்டத்தில் உணரப்பட்ட ஒன்று.ஆனால் அதிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு மேலான பின்னரும் இந்த விடயத்தில் தமிழ் மக்கள் விழிப்ப்பில்லாமல் இருப்பதன் விளைவாகத்தான் குடிக்கும் நீரை விலைக்கு வாங்கும் ஒரு நிலை வளர்ந்து வருகிறதா? இவ்வாறு தெருத்தெருவாக நீர் விற்கும் கடைகள் மற்றும் வாகனங்களில் எத்தனை அதற்குரிய பதிவுகளோடு இயங்குகின்றன? யாழ் மாநகர சபையில் மணிவண்ணன் மேயராக இருந்த காலத்தில் மாநகர சபை உறுப்பினரான பார்த்திபன் இது தொடர்பான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.
நீரை விற்பதற்கு அனுமதி
தொடக்கத்தில் ஆறுக்கும் குறையாத நீர் விற்கும் கடைகள் இருந்தன.இக்கடைகள் எவையும் நீரை விற்பதற்கு அனுமதி பெற்றவை அல்ல. வியாபார அனுமதியை மட்டும் பெற்றவை. இதுதொடர்பாக பொருத்தமான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. இக்கடைகளை விட முதலில் ஊர் ஊராக வாகனங்களில் நீர் விற்கப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு பார்த்திபன் மேற்படி தீர்மானத்தை கொண்டு வந்தார்.எனினும் அந்த தீர்மானத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு போலீசார் போதிய ஒத்துழைப்பை தரவில்லை என்று கூறப்படுகிறது.
மாநகர சபை ஊழியர்கள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்த முடியாதவர்களாகக் காணப்பட்டார்கள். இப்பொழுது கிடைக்கும் தகவல்களின்படி யாழ் நகரப் பகுதிக்குள் 30க்கும் குறையாத நீர் விற்கும் கடைகள் வந்துவிட்டன.தான் ஆணையாளராக இருந்த காலகட்டத்தில் மொத்தம் ஆறு கடைகளில் இருந்ததாக முன்னாள் ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்தார். இப்பொழுது புதிய மாநகர சபை நிர்வாகம் வந்துவிட்டது. யாழ்ப்பாணத்தின் குடிநீர் உவராகும் ஆபத்தைக் குறித்தும் யாழ்ப்பாணத்தின் நகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வடிக்கப்பட்ட நீரை விலைக்கு வாங்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் புதிய நிர்வாகத்துக்கு உண்டு.
யாழ் மாநகர சபைக்கு மட்டுமல்ல புதிதாக தெரிவு செய்யப்பட்ட எல்லா உள்ளூராட்சி சபைகளுக்கும் அந்த பொறுப்பு உண்டு. கிட்டத்தட்ட நூற்றாண்டு காலமாக ஒரு பிரச்சினை படிப்படியாக வளர்ந்து வந்து இப்பொழுது காசுக்கு நீர் வாங்கிக் குடிக்கும் ஒரு நிலைமை தோன்றி விட்டது. தமிழ்ச் சமூகம் தன்னை மெத்தப் படித்த சமூகம் என்று நம்புகின்றது.ஆனால் தன் சொந்தக் கிணத்து நீரை குடிக்கலாமா இல்லையா என்ற கேள்விக்கு விடை காண முன்னரே பல கிணறுகள் உவராகி வருகின்றன.
அண்மையில் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து வந்த ஒருவர் சொன்னார் யாழ்ப்பாணத்தில் விற்கப்படும் நீரைக் குடித்த பொழுது அது கனமில்லாமல் இருந்ததாக தான் உணர்ந்ததாக.லண்டனில் தான் குடித்த நீரோடு ஒப்பிடுகையில் இங்குள்ள வடித்த நீர் இலேசானதாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.இவ்வாறு உடலுக்குத் தேவையான கனியுப்புக்கள் வடிக்கப்பட்ட நீரைக் குடிப்பதால் வரும் பாதகமான விளைவுகள் எவை ? “யாழ்ப்பாணத்தின் ஆழக் கிணறுகளில் ஏடுக்கும் நீரில் படியும் கல்சியத்தை அந்நியப் பொருளாக யாழ்ப்பாணத்தவர்கள் பார்க்கத் தேவையில்லை. அது யாழ்ப்பாணத்துக்கு அந்நியமானது அல்ல.சுண்ணக் கற் பிரதேசத்தில் பிறந்தவர்களுக்கு கல்சியம் ஒரு புறத்திப் பொருள் அல்ல” என்று பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா கூறுகிறார். புதிய உள்ளூராட்சி சபைகள் இந்த விடயத்தின் மீது கவனத்தைக் குவிக்க வேண்டும்.
உள்ளூராட்சி சபைகள்
முதலில் வடித்து விற்கப்படும் நீரைக் குடிப்பதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய வேண்டும். இரண்டாவதாக தமிழ் மக்கள் நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும்;பெருக்க வேண்டும்.அதாவது உள்ளூராட்சி சபைகள் அதற்குப் பொருத்தமான பசுமைப் பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். இதுதொடர்பான துறைசார் ஆராய்ச்சிக்காக தாயகத்திலேயே வந்து தங்கி இருக்கின்ற பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா போன்றவர்களின் துறைசார் ஞானத்தை உள்ளூராட்சி சபைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களில் பொறியியலாளர்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புடையவர்கள் பலர் உண்டு.எல்லாரையும் அழைத்து இதுதொடர்பாக கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தி தமிழ் மக்கள் தமது நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பசுமைத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
சில கிழமைகளுக்கு முன்பு பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா தலைமையிலான ஒரு குழுவினர் வழுக்கி ஆற்றின் தடங்களைப் பின்தொடர்ந்து சென்று யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரை பாதுகாப்பது தொடர்பான களஆய்வுகளை மேற்கொண்டார்கள்.வழுக்கையாறு ஓடியதாகக் கருதப்படும் தடங்களில் காணப்படும் குளங்களையும் நீர்நிலைகளையும்,நீர் தேங்குமிடங்களையும், நீரோடும் வழிகளையும் பாதுகாப்பதன்மூலம் நிலத்தடி நீரைப் பாதுகாக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இதுதொடர்பில் உள்ளூர் மக்களின் அனுபவத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான ஆராய்ச்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். புதிய உள்ளூராட்சி சபைகளில் கட்சி முரண்பாடுகளும் மோதல்களும் நிறைய உண்டு.ஆனால் அவர்கள் போட்டிபோட வேண்டிய இடம் அதுவல்ல.தங்கள் உள்ளூராட்சிப் பிரதேசங்களை எப்படிப் பசுமைப் பிரதேசங்களாக மாற்றுவது என்பதில்தான் அவர்கள் போட்டி போட வேண்டும்.
ஒவ்வொரு உள்ளூராட்சி சபை உறுப்பினரும் தனது வட்டாரத்தைத் தூய்மையானதாக, குப்பையற்றதாக, பசுமை வட்டாரமாக மாற்றுவது என்று உறுதிபூண வேண்டும். அவருடைய பதவிக்காலம் முடியும் பொழுது அவர் நட்ட மரங்களும் அகழ்ந்த குளங்களும் தூர் வாரிய வாய்க்கால்களும் என்றென்றும் அவருடைய சந்ததிக்கு அவருடைய புகழைச் சொல்லும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




