ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சந்தேகநபர்கள் வழங்கவுள்ள தகவல்கள்!
ஈஸ்டர் குண்டுதாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில், எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் பிரதிவாதிகள் தரப்பு சாட்சிய விசாரணை, தினசரி அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு சிறப்பு மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (14) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணையின் போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒவ்வொரு பிரதிவாதியும் நீதிமன்றத்தில் தங்களின் எதிர்கால பாதுகாப்பு நிலைப்பாடுகளைத் தனித்தனியாகத் தெரிவித்துள்ளனர்.
மேலதிக சாட்சிகள்..
இதன்படி, முதலாம் சந்தேகநபரான நௌஃபர் மௌலவி உட்படப் பெரும்பாலான சந்தேகநபர்கள் குற்றவாளிக் கூண்டிலிருந்தவாறு வாக்குமூலம் அளிப்பதுடன், தங்கள் சார்பாக மேலதிக சாட்சிகளையும் அழைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், ஆறாவது சந்தேகநபரான முகமது அன்வர் முகமது ரிஸ்கான் குற்றவாளிக் கூண்டில் மௌனம் காப்பார் என்றும், அவர் சார்பாக வேறு சாட்சிகள் யாரும் அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற சந்தேகநபர்கள் சிலர் சாட்சிகள் எவரையும் அழைக்காமல் குற்றவாளிக் கூண்டிலிருந்து மட்டுமே வாக்குமூலம் அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அனைத்து குற்றவாளிகளினதும் நிலைப்பாடுகளைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், பிரதிவாதிகள் தரப்பு வாக்குமூலங்கள் மற்றும் சாட்சியப் பதிவுகளை எதிர்வரும் ஒகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தினமும் நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது.