வீதியெங்கும் மரண ஓலம்! பலியெடுக்கப்பட்ட உயிர்களுக்கு நீதியின்றி தொடரும் ஆறாவது வருடம்..
ஏப்ரல் 21, 2019.. அன்றும் ஒரு சாதாரண நாளாகத்தான் இலங்கையர்களுக்கு விடிந்தது.
நேரம் செல்ல செல்ல சரியாக 08.45 மணிக்குப் பிறகு வீதியெங்கும் மரண ஓலம். ரத்தமும் சதையும் கதறல் சத்தமும் என்று வரலாற்றில் ஒரு நாளும் மறக்கவே முடியாத ஒரு கறுப்பு தினமாக அன்றைய நாள் மாறிப்போயிற்று.
அன்று, ஈஸ்டர் ஞாயிறு தினக் கொண்டாட்டத்தின் போது திருப்பலிகள் நடைபெற்ற தேவாலயங்களையும், ஆடம்பர விடுதிகளையும் குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில், 260இற்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. 500இற்கும் அதிகமானோர் காயமடைந்து மாறா வடுவை சுமந்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

நிசப்தங்களை உடைத்து அலறிய தொலைபேசியில் அதிர்ச்சித் தகவல்! அன்று உயிர் இருந்தும் உறைந்து போன நாம் (Video)
மாறாத வடு..
கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நிகழ்ந்த இந்தக் கொடூரத் தாக்குதல்கள், இலங்கையர்களின் இதயத்தில் ஆறாத ரணத்தினை ஏற்படுடுத்தியுள்ளன. இன்றுடன், ஆறு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட அந்த வலி இன்றுமே புதியதாய் இருக்கிறது.
தேவாலயங்கள், ஹோட்டல்கள் என பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடங்களே உயிரிழப்பு மையங்களாக மாறின.
அந்தக் காலை, கிறிஸ்தவக் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடச் சென்றனர். ஆனால் அவர்களில் பலர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்கள் ஒரு கொலையுண்டோர் பட்டியலில் பெயராக மாறிவிட்டார்கள்.
இலங்கை மட்டுமல்ல, முழு உலகமே இதனால் அதிர்ந்தது எனலாம்.
பொதுவாகவே ஒரு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருக்கும் வெறுப்பு, தீவிரம், மதச் சிக்கல்கள் என்பவை, மனித நேயத்தின் எதிர்மாறான உருவங்களாகதான் பார்க்கப்படுகின்றன.
ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், இலங்கை மக்களுக்கு உண்மையில் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது எனலாம்.
இது மாதிரியான தாக்குதல்களில் எல்லாம், பாதிப்படைவது பொதுமக்கள்தான். ஒரு தீவிரவாத குழுவின் செயலால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து சோகம், குழப்பம், கோபம் ஆகிய உணர்வுகளோடு வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
6 ஆண்டுகள் ஆனாலும், பல கேள்விகளுக்கு பதில் இல்லை. யார் உண்மையான சூத்திரதாரர்கள்? இந்த தாக்குதலைத் தடுக்க முடியாமலிருந்தது ஏன்? அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று பல்வேறு கேள்விகள் இங்கு காணப்படுகின்றன.
ஆறு ஆண்டுகளாக, விசாரணைகள் நடந்தன. ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. வாக்குமூலங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் உண்மை வெளியே வரவே இல்லையா என்ற சந்தேகம் வலுக்கின்றது..
நியாயம் என்பது நேரத்துடன் சேர்ந்து நகர வேண்டிய ஒன்று. ஆனால் இங்கே அது காத்திருக்கும் பயணமாகவே இருக்கிறது.
இது போன்ற பேரழிவுகளுக்குப் பிறகு, வாழ்க்கை எளிதில் சீராக மாற முடியாது. இருந்தாலும், அந்த குடும்பங்கள் இன்னும் நிமிர்ந்தே நிற்க முயற்சி செய்கிறார்கள்.
நினைவுகள், நம்பிக்கைகள், நிம்மதிக்கான நடைபாதை இப்படி நகர்கிறது அவர்களது வாழ்க்கை. ஒரு நாடு உண்மையில் வளம் பெற வேண்டுமென்றால், அது பாதுகாப்பிலும், பொது நலத்திலும் முன்னேற வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கவே கூடாது. 2019 ஈஸ்டர் தாக்குதல்களை, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) என்ற உள்ளூர் தீவிரவாதக் குழு,(ISIS) அமைப்புடன் சேர்ந்து நடத்தியதாக கூறப்படுகின்றது.
ஆனால், தாக்குதலுக்கு முன்பே இலங்கை உளவுத்துறைக்கு எச்சரிக்கைகள் கிடைத்திருந்தன என்பது பின்னர் வெளிப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்வு விசாரணைக் குழுவின் அறிக்கை, இந்தத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த தாக்குதல் ஒரு மதத்தின் பெயரில் செய்யப்பட்டது. ஆனால் அது மதம் அல்ல, இது ஒரு வன்செயல். மனிதனை மனிதனாக பார்க்கும் பார்வையை அழிக்க நினைத்த ஒரு முயற்சி.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், நீதி இன்னும் வழங்கப்படவில்லை என்றாலும், இந்த நினைவு நாள் ஒரு புதிய உணர்வைத் தூண்டுகின்றது.
இன்று, அந்த தினத்தின் 6வது நினைவுநாளில், நாம் வெறும் சோகத்தையும் கண்ணீரையும் மட்டும் நினைவுகூராமல், மாற்றத்திற்கான வரலாறு படைக்க வேண்டும்.
நினைவில் வாழும் நம் உறவுகள் அந்த நாள் உயிரிழந்தவர்கள் நம்மில் சிலரின் தந்தை, தாய், மகன், மகள், நண்பர், ஆசிரியர், மாணவர்கள் மறைந்திருக்கலாம், ஆனால் அவர்களின் நினைவுகள் இன்றும் உயிரோடு இருக்கின்றன.
அவர்கள் நினைவாக, நாம் இனிமேல் எந்தவிதமான வெறுக்கும் கருத்துகளுக்கும் இடம் கொடுக்காமல், நம் நாட்டை ஒற்றுமையால் வளப்படுத்துவோம். அந்த நினைவு தினம், ஒரு துயர நாளாக மட்டுமல்ல, ஒரு மாற்றத்துக்கான ஒளியாகவும் மாறட்டும்!
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Shadhu Shanker அவரால் எழுதப்பட்டு, 21 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
