உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்! அநுர அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை
பிணை முறி மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி(Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள் என்பன நாங்கள் மக்களுக்கு வழங்கிய முக்கிய உறுதிமொழிகளில் ஒன்று.
எங்களின் அரசியல் விஞ்ஞாபனத்திற்கு மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள். எங்களுக்கு தனிப்பட்ட தொடர்புகள் கிடையாது. எனவே, சட்டம் ஒழுங்கை சரியாகவும் சமமாகவும் செயற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
குறிப்பாக சமீப காலமாக அரசாங்க நிதி மற்றும் சொத்துகளை தவறாக பயன்படுத்தியவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன. சில ஊடகவியலாளர்கள் காணாமல் போன சம்பவங்களும் எமக்குத் தெரியும்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது குறித்து கடந்த பல தேர்தல்களின் போது விவாதிக்கப்பட்டது.
முன்னாள் தலைவர்கள் சிலர் இந்தச் சம்பவங்கள் குறித்து சாக்குப்போக்காகக் கூறி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று உறுதியளித்தனர்.
இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், ஆனால் சட்டத்தை கையில் எடுக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.