கோட்டாபயவிற்காக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்! அமைச்சருக்கு சுய சிந்தனை இல்லை என்று கூறும் மகிந்த தரப்பு
2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்தியது என்று அநுர அரசாங்கம் தற்போது செய்து வரும் பிரசாரம் கண்டிக்கத்தக்கது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி தற்போது புதிய விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்து மதத்தை சார்ந்த பிள்ளையான் சிறையில் இருந்தவாறு முஸ்லிம் இளைஞர்களை தூண்டிவிட்டு பௌத்த சிங்கள தலைவரை ஆட்சிக்கு கொண்டுவர குண்டுத்தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக குறிப்பிடப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த இப்ராஹிமின் இரண்டு புதல்வர்களும் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்தினார்கள் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது.
கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வரவே குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பிமல் உளறுகிறாரா
அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுய சிந்தனையில் இவ்வாறு பேசுகிறாரா அல்லது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இவ்வாறு உளறுகிறாரா என்பதை அறிய முடியவில்லை.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் அதிகார சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெற்றது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு வெற்றி உறுதி என்று மக்கள் தமது ஆணை ஊடாக உறுதிப்படுத்தியிருந்தார்கள்.
இவ்வாறான நிலையில் தேர்தல் வெற்றிக்காக குண்டுத்தாக்குதலை நடத்தவேண்டிய அவசியம் ராஜபக்சர்களுக்கு இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.