16,900 ஆண்டுகள் சிறைத்தண்டனை : மன்னிப்பு கோர மாட்டேன் - நவுஃபர் மௌலவியின் அதிரடி பதில்
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கில், பிரதான பிரதிவாதியான நவுஃபர் மௌலவிக்கு நீதிமன்றம் 16900 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசேட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நேற்றைய தினம் நள்ளிரவு 11:30 மணியளவில், நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையிலான நீதிபதிகள் சுஜீவ நிஸ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய விசேட அமர்வு இத்தீர்ப்பை அறிவித்தது.
வழக்கின் முதலாம் எதிரியான முகம்மது இப்ராஹீம் முகம்மது நவுஃபர் என்ற நவுஃபர் மௌலவிக்கு (அபு செய்யித் / அபு சாரிம்) மொத்தம் 16,900 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தலா 20 ஆண்டுகள்
இத்தண்டனை 220 ஆண்டுகளில் ஏககாலத்தில் கழியக்கூடிய வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
267 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காகத் தலா 20 ஆண்டுகள் வீதம் 5,340 ஆண்டுகளும், 574 பேரைக் காயப்படுத்திய குற்றத்திற்காக 1,480 ஆண்டுகளும் உட்பட ஏனைய குற்றச்சாட்டுகளுக்குமாக மொத்தம் 16,900 ஆண்டுகள் தண்டனை கணக்கிடப்பட்டுள்ளது.

ஏனைய குற்றவாளிகளான கஃபூர் மாமா (240 ஆண்டுகள்), மில்ஹான் (241 ஆண்டுகள்), அப்துல் ஹக் (241 ஆண்டுகள்), மனேஃப் (260 ஆண்டுகள்), சஜித் மௌலவி (220 ஆண்டுகள்), ஷாஃபி மௌலவி (220 ஆண்டுகள்) உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்னர், குற்றவாளிகள் எதிரிக் கூண்டில் நின்று தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இஸ்லாமிய மார்க்கத்தின் போதனைகளின்படி அதிகாரிகளிடம் மன்னிப்போ அல்லது தண்டனையைக் குறைக்கக் கோரும் கோரிக்கைகளையோ முன்வைக்க மாட்டேன்" என நபுஃபர் மௌலவி தெரிவித்தார்.
இறுதித் தீர்ப்பு
மேலும் சிலர் "எங்கள் மனசாட்சிக்கும் இறைவனுக்கும் நாங்கள் குற்றமற்றவர்கள் என்று தெரியும்; இறுதித் தீர்ப்பு மறுமை நாளில் இறைவனால் வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டனர். 27 வயதில் கைது செய்யப்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் உள்ளதாகச் சிலர் சுட்டிக்காட்டினர்.

இந்த குற்றச்செயலை யாராவது மேற்கொண்டுள்ளனர் அதற்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டும் எனினும் தான் அந்த குற்றச்செயலில் தொடர்பு படவில்லை என 6ம் பிரதிவாதி குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். விசாரணைகளில் உண்மைகள் அம்பலமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனது மதத்திற்க்காகவும் தனக்கு தனது அறிவிக்கமையும் இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டது பிழையானது என 9ம் பிரதிவாதி தெரிவித்துள்ளார். சட்டம் வேறு மனசாட்சி வேறு எனவும் மனசாட்சியின் பிரகாரம் தாம் இந்த குற்றச்செயலில் ஈடுபடவில்லை என்பது தமக்குத் தெரியும் என தெரிவித்துள்ளார்.
சட்டம் தொடர்பில் தமக்கு நம்பிக்கை ஏற்பட்டதாகவும் விளக்கலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் தாம் சட்டக் கல்லூரிக்கான நுழைவுப் பரீட்சையில் தோற்றி சித்தி அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பரிட்சையில் அகில இலங்கை ரீதியாக முதலிடத்தை தான் பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது சட்டக் கல்லூரியில் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு காரணமாக கற்கைநெறியை தொடர்வதா என்பது குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தண்டனையை குறைக்குமாறு கேட்பதற்கு வெட்கமாக உள்ளதாகவும், இலங்கையில் இடம்பெற்ற மிகப்பெரிய ஒரு குற்ற செயல் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகள் இவ்வாறு தண்டனையை குறைக்க கூறுவது வெட்கம் கெட்ட செயல் என நினைப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மேல்முறையீடு
தனது மனசாட்சியின் பிரகாரம் இந்த குற்றச்செயலை தான் செய்யவில்லை என்பது தெரியும் எனவும் அதனால் தண்டனை குறைப்புக்காக கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு தொடர்பில் மேல்முறையீடு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காதலி காத்திருப்பதாகவும் பெற்றோரை பாரமரிக்க வேண்டும் எனவும், பிள்ளைகள் மனைவியை பாராமரிக்க வேண்டும் எனவும் தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் பல்வேறு காரணிகளை முன்வைத்திருந்தனர்.
பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் வயது, குடும்பச் சூழ்நிலை மற்றும் நீண்டகாலத் தடுத்து வைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைக்குமாறு கோரினர்.
எனினும், சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர, மத்திய வங்கி குண்டுவெடிப்பு வழக்கைப் முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டி அதிகபட்சத் தண்டனையை வழங்குமாறு வலியுறுத்தினார்.
இந்த மேல் நீதிமன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் அனைவரும், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். 2021 ஆம் ஆண்டு 25 குற்றவாளிகளுக்கு எதிராக 23,000-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தொடரப்பட்டது.
விசாரணையின் போது 17 ஆம் எதிரி மரணமடைந்த நிலையில், எஞ்சிய 24 எதிரிகளில் 15 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டதுடன், 9 பேர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.
YOU MAY LIKE THIS..