உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் சுரேஷ் சலே தொடர்பான சர்ச்சைகள் உண்மைக்கு புறம்பானவை! அமைச்சர் தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து நடத்தப்படும் விசாரணைகள் அரசியல் பழிவாங்கல் நோக்கங்களுக்கானதல்ல என்றும், சுரேஷ் சலே சிறைச்சாலையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார் என வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரசின் புதிய விசாரணைகள் மற்றும் சிறைச்சாலை நிலவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு விசேட விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படல்
"சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப்பிரிவு பிரதானி சுரேஷ் சலேவுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சட்டதிட்டங்களுக்கு அமைய முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய பின்னணியில், அவர் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் வெறும் போலி வதந்திகளாகும்.

அண்மையில் அவருக்கு பல் மற்றும் கண் தொடர்பான மருத்துவப் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, அதற்கான முறையான மருத்துவச் சிகிச்சைகள் உடனடியாக அரச மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ளன.
அவர் துன்புறுத்தப்படுவதாக இருந்தால் ஏன் உடனடியாக மருத்துவானையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழ வேண்டும். அதுமட்டுமன்றி, அவரது குடும்பத்தினர் அவரை நேரில் சந்திப்பதற்கும், வீட்டிலிருந்து சமைத்த உணவைக் கொண்டு வந்து கொடுப்பதற்கும் முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரியைக் கண்டறிவதே இந்த மறுவிசாரணையின் பிரதான நோக்கமாகும்.
இந்தத் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலையீடு காணப்படுவதாகச் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற போதிலும், இது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இன்னும் விரிவான புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள், ஊடகங்கள் அல்லது நாடாளுமன்றத்தில் வெறுமனே பேசப்பட்ட விடயங்களை மட்டும் வைத்துக்கொண்டு, சட்டபூர்வமான சான்றுகள் இன்றி எவரையும் நாம் நீதிமன்றத்தின் முன்னிலைக்குக் கொண்டு வர முடியாது. பொதுமக்கள் தத்தமது அரசியல் நிலைப்பாடுகளையும், தனிப்பட்ட கருத்துக்களையும் கொண்டிருக்க முடியும்.

எனினும், அறிவியல் மற்றும் விஞ்ஞான ரீதியான ஆதாரங்களை முறையாகத் திரட்டி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் போது மட்டுமே நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட முடியும் என்பதால் தான் முறையான புதிய விசாரணைகள் அவசியமாகின்றன.
கடந்த நல்லாட்சி அரசின் காலப் பகுதியிலேயே இந்தத் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், அந்தக் காலப் பகுதியில் இது குறித்து முறையான இறுதி விசாரணைகள் நடத்தப்படவில்லை.
அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்சவின் அரசு, இது தொடர்பாக பெயரளவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்து விசாரணைகளை மேற்கொண்ட போதிலும், அவையும் முறையான மற்றும் உண்மையான விசாரணைகளாக அமையவில்லை என்ற பலத்த விமர்சனமே சமூகத்தில் எழுந்தது.
இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்கு அளித்த உறுதியான வாக்குறுதிகளுக்கு இணங்க, இந்த விவகாரத்தின் பின்னாலுள்ள உண்மைகளை முழுமையாக வெளிக்கொண்டுவர ஒரு முறையான, நேர்மையான மற்றும் புதிய விசாரணையை மேற்கொள்வதற்கான அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO