கோட்டாபயவின் அதிர்ச்சி புகைப்படம்.. ஈஸ்டர் தாக்குதலில் வெளியான முக்கிய ஆதாரம்
தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ஆணையை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு விசாரணையில் முக்கிய சாட்சியம் ஒன்று அம்பலமாகியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (24.06.2026) இடம்பெற்ற விசாரணையில் குறித்த சாட்சியம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக செலிசிட்டர் ஜெனரல், கோட்டாபய குறித்த முக்கிய புகைப்படம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதன்போது, கோட்டாபய ராஜபக்சவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மெளலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீரும் ஒன்றாய் இருக்கும் புகைப்படத்தை நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்.
முக்கிய புகைப்படம்
இது குறித்து தெரிய வருகையில், கோட்டாபய ராஜபக்சவின் கைது நடவடிக்கையைத் தடுப்பதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, சட்டமா அதிபர் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்பட்ட, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அசாத் மௌலானா ஆகியோரின் கூட்டுப் புகைப்படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது தனது கட்சிக்காரருக்கு நினைவில் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார்.
மேலும், பல்வேறு தரப்பினர் அரசியல்வாதிகளைத் தவறாமல் சந்திக்க வருவதால், அத்தகைய புகைப்படம் இருந்ததற்கான நினைவு இல்லாததில் ஆச்சரியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2017ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அசாத் மௌலானா சந்தித்தார் என்ற கூற்றை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முழுமையாக மறுக்கவில்லை.
அரசியல் படுகொலைகள்
இருப்பினும், அந்தச் சந்திப்பின்போது கோட்டாபய தெரிவித்ததாக கூறப்படும் விடயங்கள், ஒரு அரசியல்வாதியால் சாதாரணமாக நடத்தப்படும் வகையிலான சாதாரண உரையாடல்களே என்று அவர் குறிப்பிட்டார்.

அசாத் மௌலானாவுடனான சந்திப்பையோ அல்லது அது தொடர்பான புகைப்படத்தையோ மறுக்கவில்லை என்றாலும், செனல் 4க்கு அசாத் மௌலானா அளித்த அறிக்கையையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தையும் சமர்ப்பித்த ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா , அந்த உண்மைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று வலியுறுத்தினார்.
நாட்டின் நீதித்துறை, சட்டத்தரணிகள் மற்றும் முக்கிய அரசியல் படுகொலைகள் உள்ளிட்ட பல சம்பவங்கள் குறித்து அசாத் மௌலானா கூறியிருந்த அறிக்கைகளை அவர் நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டினார்.
மேலும், அசாத் மௌலானாவின் அரசியல் சித்தாந்தங்களைச் சுட்டிக்காட்டி, இலங்கையைப் பற்றி இத்தகைய அறிக்கைகளை வெளியிட்ட ஒருவரின் நம்பகத்தன்மையை சட்டமா அதிபர் திணைக்களம் கேள்விக்குள்ளாக்கியது.

இதுபோன்ற சந்தேகத்திற்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஒரு தனிநபரின் கூற்றுகளின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிப்பது வெட்கக்கேடானது என்று ரொமேஷ் டி சில்வா கூறினார்.
மேலும், அசாத் மௌலானாவின் கூற்றுக்களை நம்புவதை சட்டமா அதிபர் திணைக்களம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதிகள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய எண்ணற்ற குழுக்களின் அறிக்கைகளில் கோட்டாபய ராஜபக்வுக்கு எதிராக எந்தவொரு உண்மைகளும் குறிப்பிடப்படாத ஒரு சூழலில், அசாத் மௌலானாவின் ஒரு அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே அவர் கைது செய்யப்படத் தயாராகி வருகிறார் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா வாதத்தைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இன்று பதிலளிக்கப் போதுமான நேரம் இல்லாததால், மேலதிக வாதங்களை முன்வைப்பதற்காக மனு மீதான விசாரணையை ஜூலை 6 மற்றும் ஜூலை 9 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.