பிள்ளையான் விடுதலையின் பின்னணியில் வெளிவரும் பல இரகசியங்கள் (Video)
பல்வேறு கொலை குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் விடுதலை செய்வதற்காக சந்திப்பு ஒன்றை நடத்தி திட்டம் தீட்டப்பட்டது தெளிவாகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்திற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்,
என்னுடைய பெயரை தொடர்ந்து சொல்வதும் நீதிமன்றத்தை அவமதிப்பதும் அவர் சட்டத்தரணி என்றாலும் பொருத்தமான விடயங்கள் அல்ல. இப்படியான விடயங்களை நீங்கள் அனுமதித்தால் எங்களுக்கும் பதிலளிக்க நேரம் தர வேண்டும்.
உங்களுக்கு தெரியும் வடக்கு கிழக்கின் அரசியல் நிலைமைகள் என்னை தாக்க வேண்டும் என்பதற்காக கருத்து சொல்கிறார்கள். நானும் மக்கள் பிரதிநிதி அவரும் மக்கள் பிரதிநிதி அந்த கௌரவத்தை கொடுக்க அவர் முதல் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் ஆங்கிலத்தில் அழகாக பேசுகிறார். இவர்கள் நியமித்த நீதிபதி தான் எங்களை சிறையில் அடைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தனக்கு வழங்க வேண்டிய மரியாதை தொடர்பில் சுமந்தின் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் ஒரு சட்டத்தரணியாக இந்த விடயங்களை சுமந்திரன் தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்த சந்திரகாந்தன், இவ்வாறான இழிவான கருத்துக்களை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க கூடாது எனவும் சபையில் வலியுறுத்தினார்.
இந்நிலையில் பிள்ளையான் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களையும் பின்வரும் காணொளியில் காணலாம்...
சுமந்திரன்
முன்னதாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கர்ம வினை பற்றி பேசி இருந்தார் அவரது வார்த்தைகள் நிஜமாகி உள்ளன. முன்னாள் ஜனாதிபதி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் இந்த சூழ்ச்சி திட்டத்தை மேற்கொண்டு அதிகாரத்திற்கு வந்தபோதிலும் மக்களினால் அவர் துரத்தி அடிக்கப்பட்டுள்ளார், கர்ம வினைகள் பலனளித்துள்ளன. சர்வதேச விசாரணைகளை அனுமதிக்க முடியாது என கூறிய பலர் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என குறிப்பிட்டனர். எனினும் தற்பொழுது சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கோருகின்றனர்.
இதுவும் ஒரு வகையிலான கர்மவினையேயாகும். இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்ற குற்ற செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளே சுயாதீனமான விசாரணைகளாக அமையப்பெறும் என நாம் கூறிய போது அதனை மறுத்தனர்.
அரசியல் அமைப்பில் அதற்கு இடமில்லை என கூறினார்கள். உண்மையில் அரசியல் அமைப்பில் அவ்வாறு எவ்வித தடையும் இருக்கவில்லை. தற்போதைய நீதி மற்றும் அரசியல் சாசன அமைச்சர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். உச்ச நீதிமன்றின் நீதி அரசர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதவாண்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் இந்த சட்டப் பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது.
அப்பொழுது இந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரணானது என அவர் கருதவில்லை. தற்பொழுது பலரும் அதனை அரசியல் சாசனத்திற்கு முரணானது என கருதவில்லை. உண்மையில் அது அரசியல் சாசனத்திற்கு முரணானது கிடையாது. எவ்வாறெனினும் சிவில் போர்களின் போது சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நிபுணர் குழு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. OISL விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகள் காணப்படுகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு கலப்பு நீதிமன்ற பொரிமுறையொன்று உருவாக்கி விசாரணை நடத்துவதற்கு அப்போது அரசாங்கம் இணங்கி இருந்தது> பின்னர் அவ்வாறான ஒரு பொறிமுறையை முன்னெடுக்க முடியாது எனவும் இந்த யோசனையில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தது. நான் இந்த அனைத்து விடயங்களையும் கூறுவதற்கு ஓர் காரணம் உள்ளது.
அரசாங்கத்திற்கும் மற்றும் ஒரு தரப்பிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமைகள் தொடர்பான பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரே வழியாக சர்வதேச விசாரணைகளை கருத வேண்டி உள்ளது. ஏனெனில் முரண்பாட்டின் ஒரு முனையில் அரசாங்கம் இருக்கின்றது. நான் ஏற்கனவே கூறியது போன்று கடந்த காலங்களில் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுயாதீன நீதிமன்ற விசாரணைகள் அதாவது சர்வதேச விசாரணைகளின் ஊடாகவே குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூற முடியும். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எடுத்துக் கொண்டால் நாடாளுமன்றத் தெரிவிக்குழு கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.
தற்பொழுது கூறப்படும் விடயங்களை மிகக் குறிப்பிட்டு அடிக்கோடிட்டு அப்பொழுது கூறியிருந்தோம். நிறைவேற்று சாராம்சத்திலும் நாம் சில கேள்விகளை எழுப்பியிருந்தோம். நாட்டில் வலுவான ஒரு அரச தலைவரை ஆட்சி பீடம் ஏற்றுவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பதை நாங்கள் வலுவாக கேள்வியாக எழுப்பி இருந்தோம்.
ஏனெனில் அனைத்து விடயங்களும் அந்த கேள்வியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தன. ஏனெனில் இந்த சம்பவம் தொடர்பில் வலுவான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை. அனைத்து சூழ்நிலை சாட்சியங்களும் இந்த விடயத்தை நோக்கியே காணப்பட்டது.
அதே ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருந்தது. தற்பொழுது இந்த விடயம் மெதுவாக ஆனால் உறுதியாக அம்பலமாகி வருகின்றது. ஊடகத்தின் வெளிப்படுத்தல்கள் தற்பொழுது பலரினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட தகவல்களை பலர் இன்று ஏற்றுக் கொள்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக இரண்டு ஆவணப் படங்களை வெளியிட்டிருந்தது. கொலைக்களம் ஒன்று மற்றும் இரண்டு என இரண்டு ஆவண படங்களை வெளியிட்டிருந்தது. இவற்றில் பல்வேறு விடயங்கள் கூறப்பட்டிருந்தன. அந்த காலப்பகுதியில் இந்த ஆவணப் படங்களின் உள்ளடக்கத்தை நிராகரித்த பலர், தற்பொழுது இறுதியாக வெளியிடப்பட்ட காணொளியை ஏற்றுக் கொள்கின்றனர்.
இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உண்மை என்பது எமக்குத் தெரியும் ஏனெனில் இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் உண்மை என்பது எமக்குத் தெரியும். இதில் கூறப்பட்ட சில விடயங்கள் உண்மை என்பது தனிப்பட்ட ரீதியில் எங்களுக்கு தெரியும். நான் ஒரு விடயத்தை குறிப்பிட விரும்புகின்றேன்.
சேனல்4 ஊடகத்தின் அனைத்து விடயங்களையும் பற்றி அல்ல அசாத் மவுலானா வின் குரல் பதிவு பற்றி நான் கூற விரும்புகின்றேன். அசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சாட்சியம் அளித்திருந்தார்.
இந்த விடயத்தை வெளிப்படுத்துவதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்க கோவையின் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நான் இந்த சம்பவங்கள் சிலவற்றின் போது சட்டத்தரணியாக வழக்குகளில் முன்னிலையாகி இருக்கின்றேன்.
சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு பிணை வழங்கப்பட்ட போது நான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருக்கின்றேன். பிணை வழங்குவதனை நான் எதிர்த்திருந்தேன். நவம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டில் இவ்வாறு நான் எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன். எனவே இவ்வாறான சில விடயங்களில் நீதிமன்ற விடயங்களில் எனக்கு தொடர்பு இருந்தது என்பதை நான் இங்கே தெரியப்படுத்த விரும்புகின்றேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க கோவையின் 19ஆம் பிரிவின் பிரகாரம், நான் அவ்வாறு செய்ய வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. மேலும் நிலையியற் கட்டளை 81-1 விடயத்தையும் நான் இங்கே குறிப்பிட வேண்டி இருக்கிறது. சில நபர்களின் நடவடிக்கைகள் குறித்து, குறிப்பாக நீதிபதிகள் தொடர்பில் நாடாளுமன்றில் குறிப்பிடக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏன் இந்த விடயங்களை கூறுகிறேன் என்றால் ஒரு சில நபர்களைப் பற்றிய விவரங்களை நான் வெளியிட வேண்டி இருக்கிறது. அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்கள் அல்ல சில நீதிபதிகளின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் பற்றி நான் வெளிப்படுத்த விரும்புகின்றேன்.
நான் எந்த ஒரு நிலையியல் கட்டளையும் மீறி செயல்பட போவதில்லை. அசாத் மௌலானா பிள்ளையானுக்கு எவ்வாறு பிணை வழங்கப்பட்டது என்பது பற்றி தெளிவாக கூறியிருக்கின்றார். அசாத் மவுலானா சில நீதிபதிகளின் பெயர்களை குறிப்பிடுகின்றார். நான் அவற்றை இங்கே அம்பலப்படுத்துகின்றேன். நான் அந்த நீதிபதிகளின் பெயர்களை கூற விரும்பவில்லை.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் பற்றி மௌலானா குறிப்பிடுகின்றார். நீதிமன்றில் உள்ளே தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக அந்த நீதிபதியுடன் தாம் சந்திப்போன்றை நடத்தியதாக தெரிவிக்கின்றார்.
இந்த ஒப்புதல் வாக்குமூலம் போதுமான சாட்சிகள் இல்லை என்ற அடிப்படையில் நீதிபதி நிராகரித்தார் என்பது பற்றி கூறியிருக்கின்றார். அந்த விடயம் அதேவாறு நடைபெற்றுள்ளத குறித்த நீதிபதி இந்த வழக்குடன் தொடர்புடைய நீதிபதி இந்த சாட்சியத்தை நிராகரித்திருந்தார்.
தற்பொழுது இந்த நீதிபதி உச்ச நீதிமன்றின் நீதியரசராக கடமை ஆற்றுகின்றார். இது ஒரு பாரதூரமான விடயமாகும் இந்த நீதி அரசர் சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஊழல் மோசடி குற்றச்சாட்டு ஒன்றின் சந்தேக நபராக காணப்பட்டார். கொழும்பு நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் நீதிபதியாக வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அரசாங்கம் மாற்றமடைந்தததன் பின்னர் குறித்த நீதிபதிக்கு எதிரான வழக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.
பின்னர் அவர் பதவி உயர்த்தப்பட்டார் தற்பொழுது உச்ச நீதிமன்றின் நீதிபதியாக கடமையாற்றி வருகின்றார். இது இந்த நாட்டில் இடம் பெறும் அதிர்ச்சியான விடயம் அல்லவா? பிள்ளையானை விடுதலை செய்வதற்காக சந்திப்பு ஒன்றை நடத்தி திட்டம் தீட்டப்பட்டது தெளிவாகின்றது.
பிள்ளையானுக்கு எதிரான சாட்சியங்கள் போதுமானது அல்ல என நீதிபதி அறிவித்த காரணத்தினால் அதனைக் கொண்டு சட்டமா அதிபர் அவரை குற்றமற்றவர் அல்லது போதிய சாட்சியங்கள் இல்லை எனக் கூறி அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றுக்கொகள்ள முடியும் என அடிப்படையில் திட்டமிடப்பட்டது.
ஏதேனும் இந்த விடயத்திற்கு சட்டமா அதிபர் இணங்கவில்லை சட்டமா அதிபரின் அந்த நடவடிக்கை நான் பாராட்டுகின்றேன். முன்னாள் சட்டமா அதிபர் தப்புலா லிவேரா இந்த விடயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரதி சொலிசுட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோன் இந்த விடயத்தை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.
எனக்கு இந்த விடயங்கள் தெரியும். ஏனென்றால் நான் இந்த வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகியிருந்தேன். விசேட நீதிபதி ஒருவர் நீதிபதி ஒருவரின் முன்னிலையிலும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த பிரச்சினை காரணமாக நீதிபதி ஒருவரை நியமிப்பதில் சர்ச்சை நிலவி வந்தது பிழையான விடுதலை செய்ய இனங்காத நீதிபதி கொழும்பிற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
பின்னர் வவுனியாவில் அப்பொழுது நீதிபதியாக இருந்த நீதிபதியிடம் இந்த விடயம் குறித்து அணுகப்பட்டது. இந்த சிக்கலில் மாட்டிக் கொள்ள விரும்பாத குறித்த நீதிபதி, ஜோசப் பரராஜசிங்கம் ஒரு கத்தோலிக்கர் எனவும் ஹிந்து அல்லது முஸ்லிம் மீது நீதிபதி ஒருவர் தீர்ப்பு வழங்கினால் அது சர்ச்சையை ஏற்படுத்தும் எனவும் தமிழ் கத்தோலிக்க நீதிபதி ஒருவர் தீர்ப்பை வழங்கினால் சர்ச்சை இருக்காது எனவும் ஆலோசனை வழங்கியிருந்தார்.
பின்னர் தமிழ் கத்தோலிக்க நீதிபதி ஒருவரை அவர்கள் கண்டுபிடித்து இந்த விடயத்திற்கு இணக்கம் பெற்றுக் கொண்டனர். இதன் அடிப்படையிலேயே பிணை வழங்கப்பட்டது
ஜோசப் பரராஜசிங்கத்தை கொன்றவர்கள் எம்மை அடக்க நினைக்கிறார்கள்: பிள்ளையானின் கருத்துக்கு நாடாளுமன்றில் பதிலடி
பிள்ளையானின் பதில்
என்னுடைய பெயரை சுமந்திரன் அடிக்கடி நீதிமன்றை பற்றியும் என்னைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார் இந்த நாட்டினுடைய நீதிமன்றம் பற்றி அவர் பேசுகின்றார்
சுமந்திரனின் கருத்து
ஆமாம் இது எனக்கு தெரியும் இது நாடாளுமன்ற ஒழுக்க விதி மீறல் கிடையாது. இது அதனால் தான் நான் முன்கூட்டியே இந்த விடயங்களை தெளிவுபடுத்தி இருந்தேன் நான் அந்த விசேட நீதிபதியின் முன்னிலையில் இந்த வழக்குக்காக முன்னிலையாகி இருந்தேன், பிள்ளையானுக்கே பிணை வழங்குவதனை நான் கடுமையாக எதிர்த்தேன், நான் இந்த வழக்கில் முன்னிலையாக முடியாது என இந்த அனைத்து விடயங்களும் பதிவாகியுள்ளன.
அப்பொழுது வழக்கு விசாரணையை அரை மணத்தியாலத்திற்கு ஒத்தி வைத்தார். அதன் பின்னர் அந்த நீதிபதி சிலருக்கு தொலைபேசி மேற்கொண்டு இருக்கலாம், அதன் பின்னர் நீதிமன்றத்தில் வாதாடுமாறு எனக்கு அனுமதி வழங்கினார். அதன் பின்னர் பிள்ளையானுக்கு பிணை வழங்கப்பட்டது.
அந்த குறிப்பிட்ட தினத்தில் எங்களால் நீதிமன்றத்தை விட்டு வெளியேற முடியாத அச்சுறுத்தல்கள் காணப்பட்டன. தற்பொழுதும் பிள்ளையான் என்னை அச்சுறுத்துகின்றார். இப்பொழுதும் என்னை அச்சுறுத்துகின்றார்.
அந்த குறிப்பிட்ட தினத்தில் எங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டது நீதிமன்றத்தில் இருந்து வெளியேறி செல்வதற்கு சனல் 4 காணொளியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது நாம் எவ்வாறு வெளியே வந்தோம் என்பது பற்றிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனெனில் பிள்ளையான் அன்றைய தினம் விடுதலை ஆவார் என்பது ஏற்கனவே தெரிந்திருந்தது. அதனால் தான் அவரை வாழ்த்துவதற்கு பலர் அங்கு கூறியிருந்தனர். இது ஏற்கனவே திட்டமிட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்த பல்வேறு விடயங்கள் நடைபெற்ற போது நான் அவற்றை பார்த்திருக்கிறேன்.
நான் ஒரு சாட்சியாவேன் நான் இந்த விடயங்களை இந்த நாடாளுமன்றில் பதிவு செய்ய விரும்புகின்றேன் பிள்ளையாரை பற்றிய மட்டுமல்ல. எல்லோருக்கும் பிள்ளையான் பற்றி தெரியும் யாரோ ஒருவர் கூறினார் பிள்ளையான் படுகொலை செய்த நபர்களின் பெயர் பட்டியலை பட்டியலை வெளியிடப் போவதாக அவரைப் பற்றி யாரும் கணக்கு எடுக்க போவதில்லை.
நான் இங்கு கூற விரும்புவது என்னவென்றால் இன்னமும் பதவியில் இருக்கும் நீதிபதிகள் எவ்வாறு இந்த நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்து உள்ளார்கள் என்பது பற்றியாகும் நன்றி.
பிள்ளையானின் கருத்து
என்னுடைய பெயரை என்னுடைய பெயரை தொடர்ந்து சொல்வதும் நீதிமன்றத்தை அவமதிப்பதும் அவர் அவர் சட்டத்தரணி என்றாலும் பொருத்தமான விடயங்கள் அல்ல இப்படியான விடயங்களை நீங்கள் அனுமதித்தால் எங்களுக்கும் பதிலளிக்க நேரம் தர வேண்டும்.
உங்களுக்கு தெரியும் வடக்கு கிழக்கின் அரசியல் நிலைமைகள் என்னை தாக்க வேண்டும் என்பதற்காக கருத்து சொல்கிறார்கள் நானும் மக்கள் பிரதிநிதி அவரும் மக்கள் பிரதிநிதி அந்த கௌரவத்தை கொடுக்க அவர் முதல் கற்றுக் கொள்ள வேண்டும் அவர் ஆங்கிலத்தில் அழகா பேசுகிறார்.
இவர்கள் நியமித்த நீதிபதி தான் எங்களை சிறையில் அடைத்தார்.