பிள்ளையான் திருந்திவிட்டாராம்: நாடாளுமன்றில் புகழ்கிறார் அமைச்சர்
நினைவில் வைத்திருங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலவீனமாகக் காரணம் அந்த அமைப்பில் இருந்தோர் பிரிந்து சென்று அரசுக்கு தகவல் வழங்கியது தான் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(21.09.2023)இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானை புலி என்கிறீர்கள், அது சரி அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் சம்பந்தப்பட்டு இருந்தார். பின்னர் அவர் திருந்தியதை நினைவில் வைத்திருங்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான சாட்சியார்கள் வெளிநாடு செல்கிறார்கள் என்றால், அன்று உங்கள் நல்லாட்சியில் தடுத்து நிறுத்தி கைது செய்திருக்கலாமே.
பிள்ளையான் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டு இருந்தார்
நீங்கள் தான் அவர்களை பாதுகாத்தீர்கள். 2019 சம்பவத்திற்கு பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் வரையில் ஏன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்? எதிர்க்கட்சித்தலைவரே நீங்களும் அந்தக் குழுவில் இருந்தீர்கள் தானே, ஏன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்? தடுத்திருக்கலாமே? உங்கள் ஆட்சியில் தான் இது நடந்தது.
2015 இலிருந்து 2019 வரை உங்கள் ஆட்சிதானே. பொய்யாக ஒவ்வொரு கட்சிக்கும் அரசியல்வாதிகள் மீதும் குற்றஞ்சாட்ட வேண்டாம்.
பிள்ளையான் எம்பிக்கு நீங்கள் புலி என்கிறீர்கள். அது சரி அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் சம்பந்தப்பட்டு இருந்தார். தலதா மாளிகையை தாக்கும் போது இருந்திருக்கலாம். எனக்குத் தெரியாது.
ஆனால் நினைவில் வைத்திருங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பு பலவீனமாகக் காரணம் அந்த அமைப்பில் இருந்தோர் பிரிந்து சென்று அரசுக்கு தகவல் வழங்கியது தான். உங்கள் ஆட்சியில் தான் அதுவும் நடந்தது. அவ்வாறு இருக்கும் போது மீண்டும் மீண்டும் புலி என்று கூற வேண்டாம்.
அப்படிப்பார்த்தால் எதிர்கட்சித் தலைவரின் தந்தை விடுதலைப் புலிகளிற்கு கப்பலில் ஆயுதம் அனுப்பியதாகவும் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கும் நாம் புலி என்று கூற வேண்டுமே. அப்படி கூறுவதில்லையே. அவ்வாறு கூற முடியாது. அது யுத்த தந்திரங்கள் என்றும் கூறலாம்.
நாங்கள் பிரேமதாசவிற்கு புலி என்றோ எதிர்கட்சித் தலைவருக்கு புலி என்றோ கூறவில்லை. நாம் எச்சந்தர்ப்பத்திலும் தாக்குதலுக்கு நல்லாட்சி அரசு காரணம் என்று கூறவில்லை. நல்லாட்சி அரசு உருவானதே முஸ்லிம் மக்களின் வாக்குகளால். மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு கிழக்கு வாக்குகள் கிடைத்தன.
இதற்கான தீர்வு வேண்டுமெனின் கட்சி கட்சியாக பிரிய வேண்டாம். ஒன்றாக செயற்படுவோம். அதை விட்டு ஒவ்வொருவர் மீதும் விரல் நீட்ட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
[SJQEC7X ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |