புதுக்குடியிருப்பு - கைவேலியில் போதை ஊசி வியாபாரத்தைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை (Video)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட கைவேலி பகுதியில் போதை ஊசி வியாபாரம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்துமாறு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத்திடம் அப் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைவேலி பகுதியில் அமைந்துள்ள பாடசாலையின் மலசலக்கூடத்திலும், அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் பகுதிகளிலும் போதைக்குப் பயன்படுத்தப்பட்ட பெருமளவான ஊசிகள் மக்களால் இனம் காணப்பட்டுள்ளதுடன், இந்தப் போதை ஊசி வியாபாரம் செய்பவர்கள் தொடர்பிலும் கிராம அமைப்பினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில், சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் செய்வரினை கைவேலி தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தினர் இனம் கண்டு போதைப்பொருள் வியாபாரத்தினை நிறுத்தக்கோரி எழுதுத்மூலம் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்கள்.
மீட்டுத்தரும்படி கோரிக்கை
கைவேலிப்பகுதியில் இடம்பெறும் இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தினால் பாடசாலை மாணவர்கள், இளம் சமுதாயத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெண்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்ச்சியாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வந்தாலும் அவர்கள் எவ்வாறே வெளியில் வந்து மீண்டும் மீண்டும் அந்தத் தொழிலை மேற்கொண்டுவருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில், நேற்றைய தினம் (06.03.2023) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை அழைத்த கிராம அமைப்புக்கள் மற்றும் மக்கள், தங்களின் கிராமத்தினை போதையிலிருந்து மீட்டுத்தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதை வியாபாரம்
கிராமத்தில் புதிதாகப் பொலிஸ் குழு ஒன்றினை தெரிவு செய்வதற்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஹெராத் மக்களுக்கு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பொலிஸாரின் முன்னிலையில் புதிய பொலிஸ் குழுவாக விசேட குழு ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகப் போதை வியாபாரம் செய்பவர்களுக்கு பொது அறிவிப்பினை விடுத்துள்ளதுடன், அடுத்தக் கட்டமாக அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தில் போதைப்பொருள் வியாபாரம் செய்பவர்களைக் கிராம அமைப்புக்கள் இதன்போது பொலிஸாருக்கு இனம் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





