பல வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முக்கியமாக சிறுநீரக மற்றும் இருதய செயலிழப்பு நோயாளர்களுக்கு பயன்படுத்தும் அத்திய அவசிய மருந்துகள், உள்ளடங்கலாக 43 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டெலர் தட்டுப்பாடு காரணமாக முக்கிய மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு அரசமருத்துவமனைகளில் காணப்படுகின்றன தனியார் மருந்தகங்கள் சிலவற்றிலும் முக்கிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
பிரசவ தாய்மார்கள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுவோருக்கான இரத்தபோக்கிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், சத்திரகிச்சைக்கு பயன்படுத்தப்படும் தையல் நூல், உள்ளிட்ட பல்வேறு பட்டு நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் உள்ளிட் பல்வேறு மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிகிச்சைக்கான நேரம் குறைப்பு
சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சைக்காக வந்த நிலையில் அவர்களுக்கு செய்யப்படும் சிகிச்சையின் நேர அளவினை குறைத்துள்ளார்கள்.
முன்னர் 4 மணிநேரமாக இருந்ததாகவும் தற்போது மருத்து தட்டுப்பபாடு காரணமாக 2 மணிநேரத்திற்கு குறைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வீடு சென்றாலும் தம்மால் எந்த செயற்பாடும் செய்யமுடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 46 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இதனால் நோயாளர்கள் பலர் தமக்கான மருந்துகளை வெளியிடங்களில் பெற வேண்டிய நிலை காணப்படுகின்றது எனவும் அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் சுமார் ஒன்றரை லட்சம் மக்களுக்கும் அதே போல முல்லை தீவு மாவட்டத்தின் ஒரு பகுதி மக்களுக்குமான சிகிச்சை வழங்கும் ஒரு பிரதான வைத்தியசாலையாக காணப்படும் மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்வேறு மருந்துகளுக்குமான தட்டுப்பாடு நிலவி வருகிறது.
குறிப்பாக சிறுவர்களுக்கான பாணி மருந்துகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான குறிப்பிட்ட சில மருந்துகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.
மருந்துகளை வெளியிடத்தில் பெற வேண்டிய நிலை
இதன் காரனமாக சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் சிலருக்கு வைத்திய சாலையில் இல்லாத மருந்துகளை வெளியிடத்தில் பெற்றுக் கொள்ளுமாறு சிட்டைகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக மாதாந்த கிளினிக் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகள் இல்லாத நிலையிலும் அவற்றை வெளியிடங்களில் பெற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கான சிட்டைகள் வழங்கப்பட்டு வருகிறன.
இவ்வாறு குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக சுமார் 100 கிலோ மீட்டருக்கு அப்பால் தூரத்தில் இருந்தும் சென்று சிகிச்சை பெற்று வரும் இவ் வைத்தியசாலையில் மேற்படி மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற மருந்து தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் கொடையாளர்களின் உதவியுடன் சில மருந்துகள் கொள்வணவு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.