கைது செய்யப்பட்ட ஷிரான் பாசிக்கின் தொலைபேசியில் ஈரான் தாக்குதல் காணொளிகள்..! கிடைக்கப்பெற்றுள்ள பகீர் வாக்குமூலம்..
நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், துபாய் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல், பணமோசடி, பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்புகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்புகள் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஷிரான் பாசிக் தனது ஆரம்பக்கட்ட வாக்குமூலத்தில், துபாயில் இருந்தபோது ஈரானுடன் தொடர்புடைய தாக்குதல்கள் குறித்து அந்நாட்டு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் இலங்கைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
துபாயில் உள்ள பிரபலமான, மிகப்பெரிய வர்த்தக வளாகம் ஒன்றில் இருந்தபோது, அந்நாட்டு பொலிஸார் தன்னை சோதனை செய்ததாக பாசிக் முதற்கட்ட விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.
அந்தக் காலப்பகுதியில், ஈரானிலிருந்து துபாய், ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னணியில் தன்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரணை அதிகாரிகளிடம் பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரது கையடக்கத் தொலைபேசியை துபாய் பொலிஸார் பரிசோதித்தபோது, ஈரானால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் அதில் இருந்ததாகவும், அதன் பின்னரே தான் கைது செய்யப்பட்டதாகவும் பாசிக் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், இலங்கைக்கு நாடு கடத்தப்படும் வரையிலும், துபாய் பொலிஸார் தன்னிடம் ஈரான் தொடர்புகள் குறித்து தினமும் விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக அலசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...