ட்ரம்பின் அதிரடி அறிவிப்பிற்கு ஈரானின் கடுமையான பதிலடி..!
ஈரானை தோற்கடித்த பிறகு, ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானது, அது ஈரானுக்குச் சொந்தமானதாகவே உள்ளது தொடர்ந்து ஈரானுக்கே சொந்தமானதாக இருக்கும் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாதி தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
ட்ரம்பின் கருத்துக்கு பதிலளித்த அவர், “ஒரு ட்வீட் மூலமாகவோ, விமானந்தாங்கிக் கப்பல் மூலமாகவோ, உத்தரவு பிறப்பிப்பதன் மூலமாகவோ அல்லது தேர்தல் பிரசார உரையின் மூலமாகவோ ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்ற முடியாது” என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் சந்தித்துள்ளதாக அமெரிக்கா கூறும் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத வரை, ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை ஈரான் தொடர்ந்து அமல்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்காவுக்கு “முழுமையான கட்டுப்பாடு” இருப்பதாக ட்ரம்ப் கூறியிருந்தார். “நாம் இதை தொடர்ந்து வைத்திருப்போம் என்று நினைக்கிறேன்.
எங்கள் கடற்படை முற்றுகை ‘இரும்புச் சுவர்’ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது. இதை ஈரான் எதுவும் செய்ய முடியாது” என்று ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தார். ஆனால், ஈரான் இராணுவம் ட்ரம்பின் கூற்றை “பொய் மற்றும் கட்டுக்கதைகள்” என்று மறுத்துள்ளது.
ட்ரம்பிற்கு பதிலடி
ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து ஈரான் இஸ்லாமிய குடியரசின் முழுமையான நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்பகாரி தெரிவித்துள்ளார்.
ஈரான் ஆயுதப்படைகளின் அனுமதி மற்றும் கண்காணிப்பு இல்லாமல் எந்தவொரு வர்த்தகக் கப்பல் அல்லது எண்ணெய் கப்பலும் இந்த நீரிணை வழியாக பாதுகாப்பாக செல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்கா “மிகப்பெரிய தவறான கணக்கீட்டை” மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், ட்ரம்பின் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான கருத்து நகைச்சுவையாக கூறப்பட்டது என்று பின்னர் விளக்கம் அளித்ததாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய அமெரிக்கா–ஈரான் மோதலின் முக்கிய பதற்றப் பகுதியாக ஹோர்முஸ் நீரிணை உள்ளது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.