பலாங்கொட கஸ்ஸப தேரரின் போராட்டத்தைச் சதித்திட்டம் என வர்ணித்த ஜனாதிபதி
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஒழுக்கம், ஒழுங்கு மற்றும் தெளிவான நோக்கத்துடன் அமைய வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் நேற்றையதினம்(13) உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சத்தியாக்கிரகப் போராட்டம்
பலாங்கொட கஸ்ஸப தேரர் முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போராட்டத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒழுங்கற்ற மற்றும் இலக்கற்ற போராட்டங்கள் நாட்டில் அராஜக நிலையை உருவாக்கக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பதற்கும், அதற்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் மக்களுக்கு முழுமையான உரிமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், அவ்வாறான போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட, தெளிவான நோக்கத்தைக் கொண்ட மற்றும் ஒழுக்கமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
புதிய அரசியல் கலாசாரம்
மேலும், ஒழுங்கற்ற போராட்டங்கள் மூலம் நாளை என்ன நடக்கும் என்ற அச்சமான சூழலை உருவாக்குவதாகவும், இத்தகைய செயற்பாடுகளைப் போராட்டங்கள் எனக் கருத முடியாது, அவை சதித்திட்டங்களாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான அச்சம் மற்றும் அடிபணிதல் சார்ந்த உறவு மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும், எதிர்த்துப் போராடவும் மக்களுக்கு உரிமை உண்டு என்றும் சுட்டிக்காட்டினார்.
மக்களை அச்சுறுத்தவோ அடிபணியச் செய்யவோ அரசாங்கம் தயாரில்லை எனவும், ஜனநாயக உரிமைகளை மதிக்கும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.