போதைப்பொருளை பாவிப்பவர்கள் குடும்பத்தை பற்றியும் சிந்திக்க வேண்டும் - வைத்தியர் தஸ்லிமா வஸீர்
போதைவஸ்து பாவிப்பவர்கள் விரைவில் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்படுவார்கள். அது மாத்திரமின்றி போதைப்பாவனையால் அவர்களின் பிள்ளைகள், குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் அவலநிலை உண்டாகும் என காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீர் தெரிவித்துள்ளார்.
இன்று (30) மாலை அவரது தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கரைவலை மீனவர்களுக்கான கோவிட் சம்பந்தமான விழிப்புணர்வு காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,
அத்தியாவசியமான தேவைக்கு மாத்திரம் வழங்கப்பட்ட அனுமதிகளை முறைகேடாகப் பாவித்துக்கொண்டு வீதிகளில் உலாவித்திரிவது கடற்கரையில் கூடி அமர்ந்து கொண்டு அரட்டையடிப்பது போன்ற விடயங்களிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.
சிகரெட் புகைப்பவர்களுக்கு கோவிட் தொற்று அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. போதைவஸ்து பாவனையினால் அவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் இதனால் விரைவில் கோவிட் தொற்று ஏற்படும். இறுக்கமாகச் சுகாதார நடைமுறைகளைப் பேண வேண்டும், மீறுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கலந்துரையாடலில் கோவிட் தொற்று காலத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் மீனவர்கள் சுகாதார தரப்பினருக்கு வழங்கவேண்டிய ஒத்துழைப்புகள் தொடர்பில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். வேல்முருகு, பொதுச் சுகாதார பரிசோதகர் கே. ஜெமீல் ஆகியோர் மீனவர்களுக்கு விளக்கமளித்தனர்.
இதனைத் தொடர்ந்து காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வியாபாரிகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்குமுகமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பொது சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட 26 பேருக்கான அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பெறுபேறுகளில்
மாவடிப்பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் மட்டும் தொற்றுள்ளவராக
அடையாளம் காணப்பட்டதுடன், ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக
வந்துள்ளது என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீர்
தெரிவித்துள்ளார்.

