சுரேஷ் சலேவின் மனைவிக்கு ஏமாற்றம் - குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அனுமதி மறுப்பு
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தினசரி சட்டத்தரணி உதவியை வழங்குவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தபோது, உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்ததன் காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுப்பு தொடர்பான அறிவித்தலை முறைப்படி சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலேவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர அறிவித்துள்ளார்.
சலேவுக்கு அனுமதி மறுப்பு
வாரத்தின் 5 நாட்களும் தனது சட்டத்தரணியான அசித சிறிவர்தனவை சந்திப்பதற்கு சலேவுக்கு அனுமதி வழங்குமாறு மனோரி சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சலே தற்போது விசாரணைப் பணிகளில் இருந்து விலகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்த சந்தர்ப்பத்தில் அவர் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை எதுவும் எழவில்லை என பணிப்பாளர் அந்த கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
மனைவி, மகள் மற்றும் மகனுக்கு வாய்ப்பு
மேலும், சட்டத்தரணியை அடிக்கடி சந்திப்பதன் மூலம் சந்தேகநபருக்குத் தேவையான ஓய்வு இல்லாது போய், அவரது ஆரோக்கியத்திற்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

நீதிமன்ற உத்தரவின்படி ஏற்கனவே ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மட்டுமே சட்டத்தரணிகள், அவரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர், மனோரி சலேவுக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடும்ப உறுப்பினர்களான மனைவி, மகள் மற்றும் மகனுக்கு அவரைத் தினசரி பார்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. , சட்டத்தரணிக்கு தினசரி சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்க முடியாது என பணிப்பாளர் அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.