சட்டவிரோத மணல் அகழ்வு: கனரக வாகனங்கள், உழவு இயந்திரங்களுடன் சாரதிகள் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கனரக வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் என்பவற்றுடன் அதன் சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வள்ளிபுனம், கைவேலி, தேவிபுரம் பகுதிகளில் முறையற்ற அனுமதிப் பத்திரத்தினை பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 கனரக வாகனங்களும், இரு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மணல் ஏற்றிய வாகனங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
கைதானவர்களும் மற்றும் மண் ஏற்றிய வாகனங்களும் நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல் ஏற்றும் வாகனங்கள் திருகோணமலை - யாழ்ப்பாணம்
வீதி போக்குவரத்து அனுமதியினை பயன்படுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் பல
கிராமங்களில் மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






