மாகாண சபை தேர்தல் நடத்தாமல் இழுத்தடிப்பு! வினோநோகராதலிங்கம் குற்றச்சாட்டு
மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பு செய்வது தொடர்பாக, சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவரிடம் தெளிவுபடுத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கம் (S.Vinonodokarathalingam) தெரிவித்துள்ளார்.
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டொமினிக் வர்கலர் மற்றும் அரசியல் துறை செயலாளர் சிடோனியா கபிரியல் அம்மையார் ஆகியோருடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவினர் இன்று (10) காலை 9 மணிக்கு கொழும்பில் உள்ள தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
குறித்த சந்திப்பின் போது சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடி இருந்தோம்.
குறிப்பாக இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாமல் செய்ய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை பற்றியும், அதே போல் அதிகாரங்களை பகிர்வதை விரும்பாமல் இறுக்கின்ற அதிகாரங்களைக் கூட பறித்தெடுப்பதையும், மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பு செய்வதையும் நாங்கள் சுட்டிக்காட்டினோம்.
மேலும் தமிழர் தரப்பின் ஒற்றுமை இன்மையையும் அதற்கான வாய்ப்பாக உள்ளதை நாங்கள் ஏற்றுக் கொண்டதை அவர்களுக்கு கூறியிருந்தோம்.
தமிழ் பிரதேசங்களில் குறிப்பாக வடக்கு - கிழக்கில் அரசாங்கத்தின் காணி அபிவிருத்தி திட்டங்கள், சிங்கள குடியேற்றங்கள் சம்மந்தமாகவும் கலந்துரையாடி இருந்தோம்.
அரசியல் அதிகார பகிர்வின் ஊடான மாகாண சபை தொடர்பாக கூடுதலாக கலந்துரையாடி அவர்களுக்கு விளக்கி இருந்தோம்.
குறித்த சந்திப்பானது வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து சமகால அரசியல் பற்றியும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாகவும், அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும், கலந்துரையாடுவதன் ஓர் தொடர்ச்சியாக இன்று (10) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரங்களில் பிரிட்டன், கனடா, ஜேர்மன், நோர்வே ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற அரசியல் பிரச்சினைகள், அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் காணி ஆக்கிரமிப்பு மற்றும் தொல்லியல் திணைக்களம், வன இலாகா திணைக்களம், மகாவலி எல் வளையம் ஊடாக திட்டமிட்டு எங்களுடைய காணிகள் அபகரிக்கப்படுகின்றமை தொடர்பாகவும், மாகாண சபை தேர்தல் பிற் போடப்பட்டுள்ளமை தொடர்பாகவும் பல்வேறு விடையங்களை நாங்கள் கடந்த காலங்களில் ஏனைய தூதுவர்களுக்கும் தெளிவு படுத்தி இருந்தோம் என தெரிவித்துள்ளார்.