தண்டிக்கப்பட்டாரா வைத்தியர் அர்ச்சுனா! நீதிக்காக போராடுபவர்களுக்கு எச்சரிக்கை..
இலங்கை தமிழர் பரப்பில் சமகாலத்தில் அதிகமாக பேசப்பட்ட விடயம் சாவகச்சேரி வைத்தியசாலையும், வைத்தியர் அர்ச்சுனாவும்தான்.
ஆனால், பொதுமக்களுக்கான சேவை நியாயமாக கிடைக்கவில்லை என்பதற்காகவும், வளங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதற்காகவும் குரல் கொடுத்த வைத்தியர் அர்ச்சுனா இன்று பதவி தரமிறக்கப்பட்டு பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள விடயம் பொதுமக்களிடத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
நீதிக்காக போராடுபவர்களுக்கான மறைமுக எச்சரிக்கையா..
அவருக்கான இடமாற்றம், அவரது பதவி தரமிறக்கப்பட்டமை போன்றவை சரியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்றாலும், இந்த விடயம் இது போன்ற மக்கள் சார் பிரச்சினைகளை பகிரங்கமாக வெளிப்படுத்த நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போல அமைந்துள்ளது என்று விசனம் வெளியிடப்படுகின்றது.
சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த ஊழல், பொறுப்பின்மை, அசட்டையீனம் போன்ற பல்வேறு சமூக சீர்கேடுகளை பொது வெளியில் அம்பலப்படுத்தியன் மூலமாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அதிகமாக மக்களிடத்தில் பேசப்பட்டதுடன் ஒரு சமயத்தில் பொதுமக்களால் கொண்டாடப்பட்ட ஒருவராகவும் மாறிப் போனார்.
சமூக ஊடகங்களின் பாவனை இன்றியமையாததாக மாறிப் போன இந்த காலக்கட்டத்தில், வைத்தியர் அர்ச்சுனா தனது வெளிப்படுத்தல்களை சமூக ஊடகங்கள் வாயிலாக எவ்வித தயக்கமோ, அச்சமோ இன்றி ஒளிவு மறைவில்லாமல் பொதுமக்களிடத்தில் தனது குற்றச்சாட்டுக்களை பகிரங்கப்படுத்தினார்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் இருக்கும் வளங்கள் பயன்படுத்தப்படாமை, வைத்தியம் பார்ப்பதில் இருக்கும் குறைபாடுகள், ஊழியர்களின் அசட்டையீனம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் முன்வைத்தார்.
சாவகச்சேரி வைத்தியசாலையில், இவ்வளவு வளங்கள் உண்டு என்பது கூட வைத்தியர் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுக்களுக்குப் பின்னரே பொதுமக்கள் பலருக்கு தெரியவந்தது என்பதை பொதுமக்களின் கருத்துக்கள் மூலம் அறியக் கிடைத்தது.
மேலும், பலர் ஏற்கனவே சாகவச்சேரி வைத்தியசாலைக்குச் சென்று முகம்சுழிக்கும் வகையிலான அனுபவங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பதையும் வைத்தியர் அர்ச்சுனாவின் வெளிப்படுத்தல்களின் பின்னர் ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்தது.
சாவகச்சேரி வைத்தியசாலையில் இருக்கக்கூடிய வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய ஊழியர்கள் என அனைவரும் சேர்ந்து வைத்தியர் அர்ச்சுனாவை எதிர்த்து பணிப்புறக்கணிப்பு செய்தமை, இந்த பணிப்புறக்கணிப்பு காலத்தில் தனி ஒருவராக இருந்து வைத்தியசாலையில் கடமை புரிந்தமை மற்றும் நடந்த விடயங்கள் அனைத்தையும் உடனுக்குடன் மக்களிடத்தில் கொண்டு சேர்த்தமை போன்ற காரணங்களால் மக்களிடத்தில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கான ஆதரவு பெருகியது.
இந்த மாதம் 7ஆம் திகதி இரவு தன்னை கைது செய்ய பொலிஸார் வைத்தியசாலைக்கு வந்திருப்பதாகவும் முகநூலில் நேரலையின் ஊடாக தெரிவித்திருந்தார்.
இந்த நேரலையை அடுத்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக அதிகளவான மக்கள் ஒன்று திரண்டு வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக போராட ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல இந்த போராட்டம் விஷ்வரூபம் எடுத்து பொலிஸாரால் வைத்தியரை கைது செய்ய முடியாமல் போனது என்பதை மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்க வேண்டும்.
இரவு முழுவதும் தாண்டி மறுதினமும் வைத்தியருக்காக அணிதிரண்ட மக்களால் வைத்தியர் அர்ச்சுனா இலங்கை மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழக் கூடிய பல்வேறு நாடுகளுக்கும் அறிமுகமானார்.
சமூக வலைத்தளங்களில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவு அலை பெருக்கெடுத்த அதே சமயம், 8ஆம் திகதி மதியம் பொதுமக்கள் சூழ, படை பரிவாரங்களுடன் வைத்தியசாலையில் இருந்து சுகயீன விடுமுறை எடுத்து வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா.
இதனையடுத்து ஊடகங்களது பார்வையும், அரசியல்வாதிகளின் பார்வையும் சாவகச்சேரி வைத்தியசாலையின் மீதும் வைத்தியர் அர்ச்சுனாவின் மீதும் சென்றது.
குறிப்பாக, வைத்தியர் அர்ச்சுனாவின் மீது பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன, சுகாதார அமைச்சில் பல மணி நேரங்கள் வைத்தியர் அர்ச்சுனாவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இருப்பினும் கூட பொதுமக்களிடத்தில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கான ஆதரவு அதிகரித்த வண்ணமே இருந்தது.
வைத்தியர் மீதான விசாரணைகள், அச்சுறுத்தல்கள் போன்ற பல விடயங்களில் சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாகவே உடனுக்குடன் வைத்தியர் அர்ச்சுனா அறிவித்ததுடன், இதில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களும் இருந்தமையை மறுக்க முடியாது.
ஒரு கட்டத்தில், இந்த சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பில் வைத்தியர் மீது சிறு விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது. குறிப்பாக ஒரு அரச ஊழியர் தனது கடமை நேரத்தில் சமூக வலைத்தளங்களில் இவ்வாறு நேரலை அறிவிப்புக்களை விடுக்க முடியுமா என்றது தொடர்பில் வாத விவாதங்கள் எழ ஆரம்பித்தன.
அதேசமயம், வைத்தியர் அர்ச்சுனா வழங்கிய சில நேர்காணல்கள், அதில் வெளியிட்ட தகவல்கள் போன்றவை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும் கூட அது தொடர்பில் மறுக்கவோ அல்லது விடயங்களை மறைக்கவோ வைத்தியர் அர்ச்சுனா விரும்பவில்லை என்று பொதுமக்களின் கருத்துக்கள் ஊடாக அறியக் கிடைத்தது.
இது இவ்வாறு இருக்க கடந்த 16ஆம் திகதி வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, சமூக ஊடகங்களில் ஏனைய வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களிற்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.
இதன்போது, வைத்தியர் அர்ச்சுனா தனது தரப்பு நியாயங்கள் தொடர்பில் தானே வாதிட்டதுடன், அடுத்து வரும் வழக்கு விசாரணைகளுக்கும் தானே வாதிடப் போவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சுமுகமான செயற்பாட்டிற்காக, முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவை வைத்தியசாலையின் நிர்வாக செயல்பாடுகளில் தலையிடவும், வைத்தியசாலைக்குள் நுழையவும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும், ஒரு சில தினங்களுக்குள்ளாகவே சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து அவருக்கு இடமாற்றமும் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், தற்போது வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார்.
அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்து வைத்தியர்களின் குறைபாடுகள் தொடர்பாகவும், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்த வைத்தியர் அர்ச்சுனாவின் இந்த பதவி இறக்கமானது பொதுமக்களிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு சேவைகளை இலகுபடுத்தியும், வசதிகளை ஏற்படுத்தியும் கொடுத்திருந்த நிலையில் பிரதேச மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்த நிலையில் பேராதனை மருத்துவமனைக்கு தற்காலிக நியமனம் வழங்கப்பட்டமையால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா, “சுகாதார அமைச்சு தனது மருத்துவ நிர்வாகத்தை பறித்து, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வைத்திய அதிகாரியாக தரமிறக்கியுள்ளது, சுகாதார அமைச்சின் குறைபாடுகளை வெளிப்படையாக விவாதித்த ஒருவருக்கு இது முறையான தண்டனையாக நான் கருதுகிறேன். திணைக்கள விசாரணை இன்னும் முடிவடையவில்லை.
இதேவேளை இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள நிலையிலும் எமது மக்கள் போராடி வருகின்றனர். சர்வதேச மட்ட அமைப்பின் மனித உரிமை மீறல் விசாரணைக்கு தேவையான அதே கடிதத்தில் கலாநிதி லால் பனாபிட்டிய கையொப்பமிட்டுள்ளார்.
அதார வைத்தியசாலை ஊழலை வெளிக் கொண்டுவந்ததற்காக பரிசு வழங்கப்படுகிறது. ஊழல் செய்த அனைத்து நபர்களும் அவர்கள் செய்து வரும் விடயங்களை மறைத்து வருகின்றனர், ஆனால் உண்மையை உரக்கப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
வைத்தியரின் பதிவைத் தாண்டி, சாவகச்சேரி வைத்தியசாலை மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பொறுப்புக்குரிய எவரும் மறுத்துப் பேசவில்லை. அதைவிடுத்து வைத்தியர் அர்ச்சுனா மீதான குற்றச்சாட்டுக்களையே முன்வைத்தனர்.
பொதுமக்களின் எதிர்ப்புகள் மூலமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த சீர்கேடுகள் தொடர்பில் மேலும் அறிய முடிந்தாலும், அதற்கு எதிராக குரல் கொடுத்த வைத்தியர் அரச்சுனாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, மக்களுக்காக குரல் கொடுத்த ஒருவர் சட்டத்தால் தண்டிக்கப்பட்டதாக பொதுமக்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து அர்ச்சுனா வெளியேற்றப்பட்டது மாத்திரமின்றி பதவி தரமிறக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த செயற்பாடானாது பொதுமக்களிடத்தில் விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளதுடன் பொதுமக்கள் தங்களது ஆதங்கங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிட்டு வருகின்றனர்.
சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ரஜீவ் நியமிக்கப்பட்டதன் பின்னரும் கூட, விஷ பூச்சு கடித்த ஒருவரை சிகிச்சைக்காக அங்கு கொண்டு சென்ற போது கடமையில் ஒருவரும் இல்லையென்றும் இதன் காரணமாக வேறு ஒரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
வைத்தியசாலையில் குறைபாடுகளை பொது வெளியில் வெளிப்படுத்தியதற்காக வைத்தியர் அர்ச்சுனா பதவி தரமிறக்கப்பட்டு இடமாற்றப்பட்டுள்ளாரெனில் வைத்தியசாலை தொடர்பில் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா..??
ஆனால் மீண்டும் அதேபோன்ற குறைபாடுகளுடனேயே வைத்தியசாலை இயங்குகின்றதென்றால் வைத்தியர் அர்ச்சுனா இடமாற்றப்பட்டதும், பதவி தரமிறக்கப்பட்டதும் எந்த அளவில் நேர்மையானது என்று பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அத்தோடு, உண்மையை வெளிப்படுத்தினால் நாமும் இப்படி வஞ்சிக்கப்படுவோமோ என்ற அச்சத்தையும் நேர்மையாக செயற்பட நினைக்கும் அதிகாரிகளுக்கு இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
வைத்திய அதிகாரிகள் மீது சேறுபூசும் நடவடிக்கை, முகநூல் நேரலை உள்ளிட்ட ஏனைய பல குற்றச்சாட்டுக்கள் காரணமாக வைத்தியர் அர்ச்சுனா பதவி தரமிறக்கப்பட்டுள்ளார், அவரது பதவி தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதுதான் என்றால் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் தொடர்பில் அர்ச்சுனா சுமத்திய குற்றச்சாட்டுக்கள் குறித்தும் நியாயமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் நியாயமான வேண்டுகோள்..
முகநூல் நேரலைக்கு தடை : ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 24 July, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.