நாட்டின் கலாசாரத்தை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது
நாட்டின் கலாசாரத்திற்கும் மத கற்பிதங்களுக்கும் குந்தகம் ஏற்படக்கூடிய வகையில் அரசாங்கம் சில நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் கலாச்சாரத்தையும் மத நம்பிக்கைகளையும் பாதிக்கும் வகையிலான யோசனைகளை வன்மையாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு ஆணுறை வழங்கும் யோசனை, ஓரின சேர்க்கையாளர் திட்டமிட்ட அடிப்படையில் சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு அழைத்து வருதல் போன்றவற்றை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இவ்வாறான திட்டங்கள் நாட்டின் கலாச்சாரத்தை அழிக்கக் கூடியது என அவர் தெரிவித்துள்ளார்.
மோசமான ஒரு யுகத்திற்கு எமது நாட்டை கொண்டு செல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் கல்வி தொடர்பான கல்விக்காக பாடசாலைகளில் ஆணுறை வழங்குவது குறித்த யோசனை ஏற்புடையது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த விசர் தனமான யோசனைகளை முன்வைக்கின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது இலங்கையா அல்லது அமெரிக்காவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த தீர்மானங்கள் தொடர்பில் நாட்டின் அதி உயர்பதவியை வகிக்கும் ஜனாதிபதிக்கு தெரியுமா என்பது குறித்து தமக்குத் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு இந்த விடயங்கள் தெரியாது என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
காதல், அன்பு, கருணை போன்ற உயரிய பண்புகளும் மத கற்பிதங்களையும் புறந்தள்ளி பாலியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி செயற்படுவதற்கு எந்த ஒரு அரசாங்கத்திற்கும் இடமளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களது உடல்களை விற்று நாம் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ நாடுகள் என கூறும் சில நாடுகள் தங்களது கலாச்சாரத்தை அழித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு பெண்கள் திருமண பந்தத்தில் இணைவது திருமண வாழ்க்கையாக ஏற்றுக் கொள்ள முடியுமா? என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கலாச்சாரத்தை சீரழிவுக்கு உட்படுத்தும் அரசு அதிகாரிகளை உடனடியாக பணி நீக்குமாறு அரசாங்கத்திடம் தான் கோருவதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பௌத்த மத கலாச்சாரத்தின் அடிப்படையில் பல ஆயிரம் ஆண்டுகள் உருவாக்கப்பட்ட கலாச்சாரத்தை கொண்ட நாடு இது எனவும் அவற்றை பாதுகாத்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிழையான பாதையில் பயணிக்க வேண்டாம் என ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் தான் தயவுடன் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.



