பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாராஹேன்பிட அபயராமயவில் வருடாந்தம் நடைபெறும் கிரி அம்மா தானம் (கிரி அம்மா தானய) வழங்கும் புண்ணிய நிகழ்வு இன்று (18) முற்பகல் விகாரையில் நடைபெற்றது.
நாராஹேன்பிட அபயராமாதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்திற்கமைய இப்புண்ணிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வருடாந்தம் நடத்தப்படும் இந்த தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வானது இம்முறை 19ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்டது.
சமய வழிபாடுகளில் ஈடுபட்ட கௌரவ பிரதமர் மஹாசங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வில் ஈடுபட்டார். அதன் பின்னர் பிரதமரின் தலைமையில் நூறு கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கும் நிகழ்வைக் குறிக்கும் வகையில் பிரதமரினால் ஒரு கர்ப்பிணி தாய்க்கு உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் அனுசாசனம் செய்கையில்,
எமது தாய்நாட்டை நேசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் உள்ள அதே அபிலாசையும், விருப்பமுமே பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு உள்ளது. இந்நாட்டின் முப்பது ஆண்டுக் கால யுத்தத்தை நிறைவு செய்வதற்கான பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் மற்றும் துணிச்சலின் மூலம் நாட்டை மீட்டெடுக்க முடிந்தது.
இலங்கை வரலாற்றில் நமது நாடு பல பேரழிவுகளைக் கடந்து வந்துள்ளது. இந்நாட்டை சுபிட்சமானதொரு எதிர்காலத்தை நோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்று தற்போது மற்றுமொரு எதிர்பார்ப்புள்ளது.
அதற்கான பலமும் தைரியமும் பிரதமருக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆசீர்வாத பூஜை ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பிரதமரின் வாழ்க்கை பயணத்தின் நிழலாக விளங்கினார்.
அதிகாரத்தில் இருக்கின்ற போதிலும், இல்லாத போதிலும் இன்றும் என்றும் இந்த புண்ணிய நிகழ்வை ஆனந்த தேரர் நிகழ்த்துவார். இந்த ஆசீர்வாத பூஜையானது இந்நாட்டை நேசிக்கும் அனைவரது சார்பிலும் பிரதமருக்குச் செய்யும் பூஜை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இந்த பிறந்த நாள் மகிழ்ச்சியான மற்றும் வளமான பிறந்தநாளாக அமையவும், கடந்த ஆண்டுகளை விட எதிர்வரும் ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக அமையப் பிரார்த்திப்பதாகக் கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்துள்ளார்.
இதன்போது கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகள் பிரதமரினால் விடுவிக்கப்பட்டன.
குறித்த புண்ணிய நிகழ்வில் நாராஹேன்பிட அபயராமாதிபதி,
முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர், பிரதமரின் பாரியார்
ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ச, அமைச்சர்களான காமினி லொகுகே, நிமல்
சிறிபால டி சில்வா, சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர்களான சிறிபால கம்லத்,
இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் ஹோ தி தன் ட்ருக் மற்றும் பெற்றோலியக்
கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

