புதிய சமூக வலைத்தளத்தை தொடங்கவுள்ளாரா டொனால்ட் ட்ரம்ப்?
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதிதாக சமூக வலைதளமொன்றை தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த விடயத்திற்கு எதிராக அவர் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் மீது ஃபுளோரிடாவின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போது ட்ரம்ப் புதிதாக சமூக வலைதளம் ஒன்று தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
'TRUTH' சோஷியல் மீடியா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சமூக வலைதளம் ட்ரம்ப்பின் (TMTG - Trump Media & Technology Group) நிறுவனத்துக்குச் சொந்தமானது என கூறப்படுகிறது.
சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் குறித்த வலைதளமானது அடுத்த மாதம் ஒரு சில பயனர்களுக்கு மாத்திரம் பீட்டா முறையில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து ட்ரம்ப் குறிப்பிடுகையில்,
பெரிய தொழிநுட்ப நிறுவனங்களின் தன்னிச்சையான கொடுங்கோல் போக்கை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் இந்த சமூக வலைதளத்தை உருவாக்கியிருக்கிறேன்.
டுவிட்டரில் தாலிபன்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் உலகில் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலையில்லாமல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மௌனமாக இருந்து வருகிறார்.
அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.