உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் தீர்வை தராதவர்களுக்கு வாக்களிக்கவேண்டாம்: கர்தினாலின் கோரிக்கை
இந்த ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளை அரசியலாக்குவதாக நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை இலங்கையின் கர்தினால் மல்கம் ரஞ்சித் மறுத்துள்ளார்.
இந்த செய்தியை கத்தோலிக்க இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தவறானது என்றும், எந்தக் கட்சிக்கும் வாக்களிக்குமாறு தாம் யாரிடமும் கேட்கவில்லை எனவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்
அதேநேரம் மனித உரிமைகளை மீறும் அல்லது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் மீதான விசாரணைகளில் நீதி மற்றும் நியாயத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க விருப்பமில்லாத கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அவர் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இடதுசாரி மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேர்தல் கூட்டணி தேசிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு அரசியல் கட்சிகள் மட்டுமே ஆட்சிக்கு வாக்களித்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான வழிகளை முன்மொழிந்துள்ளன என்றும் கர்தினால் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்தி தீர்வை வழங்கும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
தாக்குதல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க உள்ளூர் அரசு தவறினால் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் கர்தினால் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |