தாய்வான் - இந்தியா கூட்டாண்மை நகர்வு: மோடிக்கு சீனா எச்சரிக்கை
இந்தியாவின் தேர்தல் முடிவுகளுக்கு தாய்வான் அரசு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலளித்த மோடியின் கருத்துக்கு சீனா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தாய்வானின் ஜனாதிபதி லாய் சின்(Lai Ching) தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த வாழ்த்து செய்திக்கு, நரேந்திர மோடி( Narendra Modi) பதில் வழங்கிய கருத்துக்கே சீனா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தாய்வானின் ஜனாதிபதி லாய் சின் தனது எக்ஸ் தளத்தில், “" தேர்தலில் வெற்றி பெற்ற உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்வான் - இந்தியா கூட்டாண்மை
வேகமாக வளர்ந்து வரும் தாய்வான் - இந்தியா கூட்டாண்மை, நம்முடைய வர்த்தக ஒத்துழைப்பு விரிவுப்படுத்துதல், இந்தோ-பசிபிக் அமைதி உள்ளிட்ட விவகாரத்தில் மேம்படுவதை எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் வழங்கிய நரேந்திர மோடி, உங்களுடைய அன்பார்ந்த தகவலுக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை நோக்கி பணியாற்ற எதிர்பார்க்கிறேன்" என கூறியுள்ளார்.
இதன்படி குறித்த கருத்துக்களுக்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில்,
''சீனாவுடன் ராஜாங்க ரீதியில் உறவு வைத்திருக்கும் நாடுகள் தாய்வான் அதிகாரிகளுடன் உரையாடுவதை எங்கள் அரசு கடுமையாக எதிர்க்கிறது.
சீனாவில் ஒருங்கிணைந்த பகுதியாக தாய்வான் உள்ளது. சீனாவின் கொள்கை என்பது சர்வதேச உறவுகளில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறை மற்றும் சர்வதேச சமூகத்தில் நிலவும் ஒருமித்த கருத்து ஆகும்.
தீவிர அரசியல் ஈடுபாடு
இதற்கமைய இந்தியா இதில் தீவிர அரசியல் ஈடுபாட்டை உருவாக்கியுள்ளது. இதற்கு சீனா இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது'' என்றார்.
இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற்று ஜூன் 4ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
பதவி ஏற்க இருக்கும் பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |