மோடியின் பதவியேற்பு விழா திகதியில் குழப்பம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைச்சுக்களுக்கான பங்கீடு இன்னும் இறுதியாகாத நிலையில் 8ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருந்த மோடியின் பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்படலாம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கூட்டணியில் அமைச்சுக்களுக்கான பங்கீடு நிறைவு பெற்ற பிறகு பதவி ஏற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பாஜக மேலிடத்தின் திட்டம்
இந்நிலையில் எதிர்வரும் 8ஆம் திகதிக்குள் அமைச்சுக்களுக்கான பங்கீட்டை இறுதி செய்ய பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி சனிக்கிழமை அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடு நிறைவுச் செய்யப்பட்டால் 9ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மோடி பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் ஒதுக்குவது? பாஜக வில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது? என்பது குறித்தான ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 3 முக்கிய மத்திய மந்திரி பதவிகளையும், இராஜாங்க மந்திரி பதவிகளையும் அவர் எதிர்பார்த்து பாஜக மூத்த தலைவர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
மோடி திட்டவட்டம்
அதுபோல், லோக்ஜன சக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி, சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜிதன் ராம் ஆகியோரும் தலா ஒரு மந்திரி பதவி கேட்கிறார்கள்.
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் முக்கிய அமைச்சுக்களை கேட்டாலும், பாரதிய ஜனதா கட்சி 6 முக்கிய அமைச்சகத்தை விட்டுக் கொடுக்க மறுத்துள்ளது.
இதனால் உள்துறை, நிதி, பாதுகாப்பு, சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய 6 துறைகளையும் யாருக்கும் ஒதுக்க இயலாது என மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |