எரிவாயு மற்றும் பால் மா இறக்குமதிக்கு தடையேற்படுத்தியுள்ள டொலர் தட்டுப்பாடு
டொலர் கையிருப்பு நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு, பால் மா போன்றவற்றை இறக்குமதி செய்வதில் தடையேற்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையை சீர் செய்ய இலங்கை மத்திய வங்கி தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த அமைச்சின் செயலாளரி் கே.டி.எஸ்.ருவான் சந்திர (K.D.S. Ruwanchandra) தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு அந்நிய செலாவணி நாட்டுக்கு கிடைக்காத நிலைமையில் இந்த நெருக்கடி உருவாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே டொலர் தட்டுப்பாடு காரணமாக இப்படியான நிலைமை ஏற்படவில்லை என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல (S.R Attygalle) கூறியுள்ளார்.
எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளதாகவும் இதனால், எரிவாயு தட்டுப்பாடு நீங்கி, உடனடியாக வழமை நிலை உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நாட்டுக்கு தேவையான பால் மா தொகை கையிருப்பில் இருப்பதாக இலங்கையில் பால் மாவை விநியோகிக்கும் பிரதான நிறுவனம் அறிவித்துள்ளது எனவும் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் நாட்டில் பல பகுதிகளில் சமையல் எரிவாயு மற்றும் பால் மா என்பவற்றை கொள்வனவு செய்ய மக்கள் வரிசையில் நிற்பதாக தெரியவருகிறது.