பாரிய பின்னடைவை சந்திக்கப் போகும் இலங்கை ரூபா! ஏற்படவுள்ள அபாய நிலை குறித்து நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை(Video)
நாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வருகின்றது. கடந்த ஒரு மாத காலமாக ரூபாவின் பெறுமதியானது அதிவேக வளர்ச்சி நிலையை பதிவு செய்து வருகின்றது.
குறிப்பாக வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 24.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
டொலரின் பெறுமதி உயரும் சாத்தியம்
மேலும், ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் உயராது என்றும், எதிர்வரும் நாட்களில் மீண்டும் டொலரது பெறுமதி உயரக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் தற்போதுள்ள இறக்குமதி தடை நீக்கப்பட்டு, கடன்களை செலுத்த ஆரம்பிக்கும் போது ரூபாவின் பெறுமதி குறைந்து டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை ரூபாவின் பெறுமதி எதிர்வரும் காலங்களில் பாரியளவு பின்னடைவை சந்திக்கும் எனவும், எதிர்வரும் நாட்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையான சரிவிற்கு உள்ளாகும் எனவும் ப்ளூம்பேர்க் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
உலகின் நாணய அலகுகளில் மிகவும் செயற் திறன் மிக்க நாணய அலகாக இலங்கை ரூபா காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இறக்குமதி குறித்த கட்டுப்பாடுகள் தளர்த்தல் மற்றும் கடன் செலுத்துகை என்பன ஆரம்பிக்கப்பட்டதும் ரூபாவின் பெறுமதி குறித்த எதிர்காலம் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் என அந்த இணையத்தளமும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேசமயம், இந்த ஆண்டு இறுதியளவில் ரூபாவின் பெறுமதி 350 ரூபாவாக உயர்வடையும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில், டொலரின் மதிப்பானது 350 ரூபாவை தாண்டும் என்றும் அது 405 ரூபா வரை சென்றால் கூட ஆச்சரியமில்லை எனவும் பொருளாதார நிபுணர்கள் தங்களது கணிப்பை வெளியிட்டு வருகின்றனர்.
கடும் நெருக்கடியான நிலையை சந்திக்க நேரிடும்
தற்போது ரூபாயின் பெறுமதி வலுவடைவதனை பார்த்து எவ்வித திருப்த்தியும் அடைய முடியாது. எதிர்வரும் நாட்களில் கடன் செலுத்தவுள்ளது. “இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. டொலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய தேவைகள் அதிகமாக உள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் காலங்களில் கடும் நெருக்கடியாக நிலைமை ஒன்றை சந்திக்க நேரிடும் அபாயங்கள் அதிகமாக உள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
ரூபாயை வலுப்படுத்த நாட்டிலிருந்து டொலர்கள் வெளியேறுவதனை தடுப்பது மாத்திரம் தீர்வாகாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்களை தடுத்து வைத்தே ரூபாயினை வலுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் இந்த நிலைமை மாற வேண்டும்.
டொலர் சம்பாதிப்பதற்காக வழியை கண்டுபிடித்து ரூபாயின் பெறமதியை வலுப்படுத்த வேண்டும். தற்போதைய நிலைமை காரணமாக எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.”
அதேசமயம், ”சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி காரணமாக டொலர் மதிப்பு குறைந்துள்ளதுடன் ரூபாயின் பெறுமதி உயர்ந்துள்ளதென பொருளாதார ஆய்வு நிறுவனமான அட்வகாட்டா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேலும் ரூபாய் மதிப்பு அதிகரிப்பு பொருளாதாரத்தின் செயல்பாட்டினால் நடந்த ஒரு விடயம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூபாயின் திடீர் உயர்வு என்பது ஏற்றுமதியாளர்களுக்கு நல்லதல்ல. ரூபாய் மதிப்பு சரிவு இறக்குமதியாளர்களுக்கு நல்லதல்ல, எங்களுக்கு தேவை ஓரளவு நிலையான மாற்று விகிதமாகும்.
ரூபாய் மதிப்பை உயர்த்துவது அல்லது குறைப்பது சந்தைக்கு எந்த ஆச்சரியமும் இல்லை, அதிக வட்டி விகிதங்களால் உங்கள் தேவை சிறிது குறைகிறது. டொலர்களை பயன்படுத்தி மக்கள் இறக்குமதி செய்வதில்லை. இறக்குமதி செய்யும் போது டொலரின் மதிப்பு அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.”
அதேசமயம், மேலும் சில பொருளாதார நிபுணர்கள் டொலரின் பெறுமதி 450 ரூபா வரை செல்லும் என்றும், எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆக மொத்தத்தில் ரூபாவின் பெறுமதி மீண்டும் கடும் வீழ்ச்சியை சந்திக்கப் போகின்றது என்பது பொருளதார நிபுணர்கள் உள்ளிட்ட சர்வதேசத்தின் கணிப்பாக உள்ளது.
பாதிக்கப்படும் மக்கள்
அவ்வாறு ஏற்படும் சமயத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
டொலரின் தற்போதைய விற்பனை விலை வீழ்ச்சி கண்டிருப்பது தற்காலிகமானது எனவும், இன்னும் சில மாதங்களில் படு மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படப் போகின்றதென்றும் எதிர்க்கட்சியை சார்ந்த அரசியல்வாதிகளும், அரசியல் விமர்சகர்களும் எதிர்வுகூறல்களையும் எச்சரிக்கைகளையும் விடுத்து வரும் அதேநேரம், இந்த டொலரின் பெறுமதி வீழ்ச்சியானது சாதாக மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக தங்களது ஏற்றது போன்ற காரணங்களை கூறி மார் தட்டிக் கொள்ளும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளையும் பார்க்க முடிகின்றது.
குறிப்பாக, ரூபாவின் பெறுமதி உயர்ந்து டொலரின் பெறுமதி சரிந்து வரும் இந்த சந்தர்ப்பத்தில், பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதிலும், ரூபாவின் பெறுமதி உயர்ந்து வருவதற்கான நன்மையை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என ஆளும் தரப்பு சுட்டிக்காட்டி வருகின்ற போதிலும், அது போன்ற நன்மைகளோ, விலைகுறைப்புக்களோ நடைமுறைக்கு வருவதில்லை என்று பொதுமக்களிடம் நாங்கள் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |