இலங்கையில் டொலர் விற்பனை செய்யும் கறுப்பு சந்தையாக மாறியுள்ள வங்கிகள்
இலங்கையில் டொலர் விற்பனை செய்யும் கறுப்பு சந்தையாக வணிக வங்கிகள் மாறியுள்ளதாக பல தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வர்த்தக வங்கிகள் கொள்வனவு செய்வதற்கு நிர்ணயிக்கும் விலைக்கும், தற்போது மதிப்பிழந்துள்ள அமெரிக்க டொலரை விற்பதற்கு விதிக்கப்படும் விலைக்கும் இடையிலான இடைவெளி பாரியளவு அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதனால், வர்த்தக வங்கிகளில் டொலர்களை வாங்குவோர் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
வர்த்தக வங்கிகள்
சில வர்த்தக வங்கிகள் வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதங்களுக்கு அமைய, ஒரு டொலரின் கொள்வனவு விலை 292 ரூபாவாகவும், விற்பனை விலை 303 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதனால், வணிக வங்கிகளும் டொலர்களை வாங்கும் போது வாடிக்கையாளர்களிடம் இருந்து 2 சதவீதம் தரகு பணம் வசூலிக்கின்றன.
அதன்படி, வங்கிகளுக்கு பணம் அனுப்பும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் பணத்தை வாங்கும் பிற வாடிக்கையாளர்கள், டொலர்களை வாங்கி விற்பதன் மூலம் வணிக வங்கிகள் நியாயமற்ற முறையில் அதிக இலாபம் ஈட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.