இலங்கை ஏற்றுமதியாளர்களின் டொலர் வருமானத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில் பதுக்கல்: மத்திய வங்கியின் ஆளுநர்
இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் தமது அமெரிக்க டொலர் வருமானத்தின் பெரும்பகுதியை வெளிநாடுகளில் தொடர்ந்து பதுக்கி வைத்திருப்பதுடன், தற்போதைய பொருளாதார வீழ்ச்சியின் போது நாட்டிற்கு தேவையான அந்நிய செலாவணியை வழங்க மறுத்து வருகின்றனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
“மாதம் ஒன்றுக்கு சராசரியாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவான ஏற்றுமதி
வருமானத்தில் இருந்து, குறைந்தது 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூ. 287.23
பில்லியன்) இலங்கைக்கு திரும்பக் கொண்டுவரப்படவில்லை.
இந்த வருமானம் மருந்துக்காக அல்லது குழந்தைகளுக்கான பால் மா இறக்குமதிகளுக்காக பயன்படுத்தியிருக்க முடியும்.
வர்த்தமானி அறிவித்தல்
2021 இல் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம், இலங்கைக்கு ஏற்றுமதி வருமானத்தை திருப்பி அனுப்பும் விதிகள் இலக்கம் 5 இன் கீழ், இலங்கை மத்திய வங்கி ஏற்றுமதியாளர்கள் அந்நிய செலாவணி வருமானத்தை திரும்பக் கொண்டுவருவதையும், அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகளைத் தவிர, ஏனைய தொகையை ரூபாவாக மாற்றுவதையும் கட்டாயமாக்கியுள்ளது. எனினும் அது கடைபிடிக்கப்படவில்லை.
2021 ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் 985 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏற்றுமதி இடம்பெற்றுள்ளது. எனினும் அதில் 345 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு திருப்பி கொண்டுவரவில்லை.
கடந்த ஐந்து மாத ஏற்றுமதி வருமானத்தில் இருந்து, 5 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், 20% மட்டுமே ரூபாயாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் குறைந்தபட்சம் 40% பணம் ரூபாவாக நாட்டில் இருக்க வேண்டும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் ஏற்றுமதியாளர்கள் தங்கள் (ஏற்றுமதி) வருவாயை (மீண்டும்) கொண்டு வந்து வங்கிகளிடம் ஒப்படைப்பது என்ற பெரிய பொறுப்பு உள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்
எனினும் மாதம் ஒன்றுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தில், கடந்த 5 மாதங்களில், ஏற்றுமதியாளர்கள் இறக்குமதி அல்லது (வெளிநாட்டில்) கடனை அடைப்பதற்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டதாக கணக்கு காட்டியுள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது சாத்தியமில்லாத கணக்கு காட்டலாகும். மத்திய வங்கியின் நியமப்படி, மாதத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்“.
4 பில்லியன் ரூபா கையிருப்பில்: இரு ஆண்டுகளாக எவருக்கும் உதவாத கோட்டாபய |