பொருளாதார நெருக்கடியில் மோசமாகும் இலங்கை பெண்களின் நிலைமை:இந்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்
பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கையில் பெண்கள் கடும் பொருளாதார கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலை நாடி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் ஏ.என்.ஐ செய்தி சேவை தெரிவித்துள்ளது.
தொழில்களை இழந்து வாழ்வாதாரத்திற்காக போராடும் பெண்கள்
கடந்த மாதத்தில் இலங்கையில் பாலியல் தொழில் 30 வீதமாக அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.இலங்கையில் என்றுமே ஏற்படாத பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்கள் பெரும் கஷ்டங்களையும் வறுமையையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இலங்கையர்களில் பலருக்கு உணவு மற்றும் அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள தினமும் போராடி வருகின்றனர். இதனால், வீடுகளில் அன்றாக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத கஷ்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆடைத்தொழிற்சாலைகளில் பணிப்புரிந்து வந்த அதிகளவான பெண்கள் தொழில்களை இழந்துள்ளனர்.
வருமானத்திற்காக பாலியல் தொழிலாளிகளாக மாறும் நிலைமை
இந்த பயங்கரமான நிலைமைக்கு மத்தியில் தற்காலிக பாலியல் தொழில் விடுதிகள் உருவாகியுள்ளதுடன் பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாறும் நிலைமை உருவாகி இருப்பதாக பாலியல் உரிமைகள் தொடர்பாக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஸ்டேண்டட் மூவ்மென்ட் ஒப் லங்கா என்ற நிறுவனம் இந்திய செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில்களை இழந்துள்ள பெண்கள், மசாஜ் நிலையங்கள் போன்றவற்றில் பணிப்புரிந்து, பாலியல் தொழிலாளிகளாக வருமானத்தை ஈட்டி வருவதாகவும் ஏ.என்.ஐ செய்தி சேவை கூறியுள்ளது.