டொலர் நெருக்கடி செயற்கையானது -அரசாங்கத்திடம் போதுமான கையிருப்பு உள்ளது! தேவானந்த சுரவீர எம்.பி.
நாட்டில் தற்போதைக்கு நிலவும் டொலர் நெருக்கடியானது செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதனைச் சமாளிக்கும் வகையில் அரசாங்கத்திடம் போதுமான டொலர் கையிருப்பு உள்ளதாகவும் தேவானந்த சுரவீர எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
மகரகம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர இந்தக்கருத்தினை முன்வைத்துள்ளார்.
வெள்ளைமாளிகையருகே துப்பாக்கி சூடு! அமெரிக்காவில் பெரும் பரபரப்பு- தொடர்ந்து இலக்கு வைக்கப்படும் ட்ரம்ப்
டொலர் நெருக்கடி
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி உண்மையான டொலர் நெருக்கடி அல்ல , மாறாக அரசியல் ஆதாயத்திற்காக சில குழுக்களால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான பற்றாக்குறையாகும்.

அரசாங்கத்திடம் போதுமான டொலர்கையிருப்பு இருப்பதால் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். இந்த நிலைமை 2021 அல்லது 2022-ல் நிலவிய உண்மையான ரூபாய் அல்லது டொலர் பற்றாக்குறை போன்றதல்ல.
சில குழுக்கள் டொலர்களை மறைத்து வைத்து, அதன் மூலம் அரசாங்கத்தைக் கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ஒரு செயற்கையான பற்றாக்குறையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
போதுமான கையிருப்பு
குறுகிய கால ஆதாயங்களை எதிர்பார்த்து டொலரின் மதிப்பு உயரும் என்று நம்புபவர்களும் இந்த நிலைமைக்குப் பின்னால் உள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிதி நிலைத்தன்மை குறித்து கவனித்தால் அரசாங்கத்திடம் தற்போது 7 பில்லியன் டொலர் கையிருப்பு உள்ளது.
மேலும், 8 பில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் வந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் 700 மில்லியன் டொலர் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 150 மில்லியன் டொலர் உலக வங்கி மூலம் பெறப்படவுள்ளது.

மத்திய கிழக்கு நெருக்கடி போன்ற உலகளாவிய பிரச்சினைகள் காரணமாக, எண்ணெய் மற்றும் மருந்துகளின் இறக்குமதிக்கு அதிக அளவு டொலர்கள் ஒதுக்கப்பட வேண்டியிருந்த போதிலும், அரசாங்கம் எந்தவொரு இறக்குமதி கட்டுப்பாடுகளையும் இதுவரை விதிக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
பொருளாதாரத்தில் யார் வேண்டுமானாலும் இணைவதற்கு சந்தை திறந்திருப்பதால், மக்கள் சந்தையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வரலாற்றில் நிலவிய உயர் பணவீக்க நிலைமைகள் மீண்டும் ஏற்பட அனுமதிக்கப்படாது என்றும், இந்தச் சூழ்நிலையில் அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு தீர்வுகளை வழங்கி வருகிறது என்றும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர மேலும் கூறினார்.