இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாக மாறுகிறதா இலங்கை? (Photos)
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி காரணமாக பெரும் நெருக்கடி நிலையில் அரசாங்கம் சிக்கியுள்ளது.
இந்நிலையில் எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் தொடர்ந்தும் திணறி வருகின்றனர்.
இலங்கை கடற்பரப்பில் அனைத்து விதமான பொருட்களுடன் பல கப்பல்கள் நங்கூரமிப்பட்டுள்ள போதிலும், அவற்றை இறக்க போதிய டொலர் இன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிராந்திய நாடான இந்தியாவின் பெரும் உதவியை இலங்கை அரசு நாடியுள்ளது. ஏற்கனவே பெருந்தொகையான கடன்களையும், உதவிகளையும் பெற்றுள்ளன.
இந்நிலையைில் இன்றும் மீண்டும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக தருமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவை கோரியுள்ளது. இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்த நிதி உதவி கோரப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பில் இன்று ஆரம்பமான ஐந்தாவது பிம்ஸ்ரெக் சர்வதேச மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நேற்று இலங்கை வந்தார்.
இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை காண்காணிக்கும் வகையில் இந்தியா எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.சி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.இதன்போது அங்குள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்.
இது குறித்து சிங்கள மக்கள் தமது கருத்தினை வெளியிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக நாட்டு மக்கள் எரிபொருள், எரிவாயுவை பெற்றுக்கொள்வதில் திணறி வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அதனை பெற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறு மக்கள் அசௌகரியங்களை முகங்கொடுத்துள்ள நிலையில், எந்தவொரு அமைச்சரும் சம்பவ இடத்திற்கு வந்து மக்களின் கஷ்டங்களை கண்டுக்கொள்ளவில்லை என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் இந்திய அமைச்சர் ஒருவர் இலங்கையிலுள்ள நெருக்கடி நிலைமை குறித்து ஆராய்வது, இந்தியாவின் மாநிலமாக இலங்கையும் மாறியுள்ளதா என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தென்னிலங்கை மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.