“நாசகார வேலை“யில் ஈடுபட்டுள்ள மருத்துவ அதிகாரிகள் சங்கம்- சுகாதார அமைச்சு குற்றச்சாட்டு
அரச மருத்துவ அதிகாரிகளின் ஐந்து மாவட்டங்களுக்கான பணிப்புறக்கணிப்பு, ஒரு நாசகார நடவடிக்கை என்று சுகாதார அமைச்சு விமர்சித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பை, மன்னார், திருகோணமலை, நுவரெலியா, ரத்தினபுரி மற்றும் பொலநறுவை ஆகிய இடங்களில் மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளக பயிற்சியாளர்களுக்கான நியமனங்களின்போது சுகாதார அமைச்சின் செயலாளர், தன்னிச்சையாக செயற்பட்டதாக கூறியே அதற்கு எதிராக இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
எனினும் புதிய பதவி நியமனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று சுகாதார சேவைகளின் பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி விஜயசூரிய தெரிவித்துள்ளார்
இந்தநிலையில், அரச மருத்துவ அதிகாரிகளின் செயற்பாடு, நாசகார வேலையாகவே பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மாத்திரம் பதவியை வழங்கியமை தொடர்பில் சுகாதார அமைச்சின் பொறுப்புக்கூறலே, தமது பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை நாடாளாவிய ரீதியில் தொடர்வதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் பிரசாத் கொலம்பககே தெரிவித்துள்ளார்.