எதிர்வரும் 5ம் திகதி நாடு தழுவிய ரீதியில் முடங்கப் போகும் துறை! வெளியானது எச்சரிக்கை
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நியாயமற்ற வரி அறவீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டம்
எதிர்வரும் 5ம் திகதி நாடு தழுவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
உத்தேச வரித் திட்டமானது மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு கடும் அநீதி இழைக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வரிக் கொள்கையை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு கோரி மகஜர் ஒன்றை ஜனாதிபதியின் செயலாளரிடம் ஒப்படைக்க உள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் மருத்துவர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனவும், வாழ்க்கை செலவு வெகுவாக உயர்வடைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டுக்கான வரிக் கொள்கை
அரசாங்கத்தின் அநீதியான வரிக் கொள்கை மீளப் பெற்றுக் கொள்ளும் வரையில் போராட்டம் தொடரும் என சங்கம் தெரிவித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் வாடகை வீடுகளில் தங்கியிருப்பதாகவும், மின்சாரம், நீர் கட்டணம் என்பன வெகுவாக உயர்வடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
வரி விதிப்பினை எதிர்க்கவில்லை என்ற போதிலும், 2023ம் ஆண்டுக்கான வரிக் கொள்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.