மக்களின் கவனயீனமான செயற்பாடுகள் பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் - எச்சரிக்கும் வைத்தியர்
இலங்கை மக்கள் சில சமயங்களில் தமது ஆடை கலாச்சாரத்தை மாற்றுவதில் காட்டும் அக்கறையைக் கூட சுகாதார வழிகாட்டுதல்களில் காட்டுவதில்லை என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.
இந்த காலகட்டத்தில் சுகாதார துறையினருக்கு மக்களின் ஒத்துழைப்புகள் பற்றி ஊடக பிரிவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கோவிட் 19 மூன்றாம் அலை தொற்றுப்பரவல் அதிகரிப்புக்கான தனிநபர் மனப்பாங்கு சார் காரணங்களாக கொத்தணிகளாக இனம் காணப்படும் இடங்கள், பொது நிகழ்வுகள், களியாட்டங்கள், சந்தைகள், அலுவலகங்கள் போன்றவற்றில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில் மக்களினால் காட்டப்படும் அக்கறையீனமே பாரிய செல்வாக்கு செலுத்துகிறது.
எனக்கு முகக்கவசம் அணிந்தால் மூச்சு முட்டுகிறது, நான் தனியாகவே தான் இருக்கிறேன் என்று முகக்கவசம் அணியாது விடல் அல்லது எனக்கு தெரிந்தவர்களுடன் இருக்கும் போது முகக்கவசம் தேவையில்லை என எண்ணுதல் பொருத்தமற்ற செயலாகும். எனினும் இனியும் நாம் திருந்தவில்லை என்றால் தொற்று தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி விடும்.
பொறுப்புள்ள மனிதராகவே நாம் இந்த சமூகத்தில் வாழ வேண்டும் ஆகவே சுகாதார நடைமுறைகளை பேணி நடவுங்கள் என்று கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி கேட்டுக்கொண்டார்.